சரியான கல்லுாரியை தேர்வு செய்வது முக்கியம்: காளிதாஸ்
சென்னை: நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் ஜே.காளிதாஸ் பேசினார்.அவர் பேசியதாவது:கல்லுாரி பொறியியல்களுக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கில் சாய்ஸ் பில்லிங் என்பது முக்கியமானது. கவுன்சிலிங் மூன்று சுற்றுகளாக நடக்கும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், அதற்கான யூசர்நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. ஏ.டி.எம்., எண்ணை எப்படி பத்திரமாக பாதுகாக்கிறமோ, அதுபோல பாதுகாக்க வேண்டும். பாஸ்வேர்டை மறக்கவும் கூடாது.கணிதம், வேதியியல், இயற்பியல் பாட மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கட் ஆப் இருக்கும். சாய்ஸ் பில்லிங் செய்வதற்கு முன், எந்த கல்லுாரி, எந்த பிராஞ்ச் என்பதை தெளிவாகமுடிவு செய்து, பில்லிங் செய்ய வேண்டும். தேர்வு செய்தது கிடைக்காத பட்சத்தில், அதே கல்லுாரியில் வேறு பாடப்பிரிவை, இரண்டாவது சாய்ஸாக தேர்வு செய்யலாம். சாய்ஸ் கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும்.அதேபோல, கல்லுாரி பெயர், கல்லுாரி எண் ஆகியவற்றை சரியாக படித்து, தேர்வு செய்யவேண்டும். ஒரே பெயரில் பல கல்லுரிகள் இருக்கும் என்பதால், இதை சரியாக கையாள வேண்டும். சாய்ஸ் முடிவு செய்த பின், ஒ.டி.பி., வரும். அதை கொண்டு, செய்ய வேண்டும். ஒரு முறை லாக் செய்து விட்டால், மறுபடியும் செய்ய முடியாது. தவறாக லாக் செய்தால், ஒரு முறை மட்டுமே அதை ரிலீஸ் செய்ய முடியும். இதற்கு அருகில் உள்ள டி.என்.இ.ஏ., சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். சாய்ஸ் பில்லிங் செய்த பின், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் அதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அந்த சீட் கிடைக்காது. உறுதி செய்யாமல் விட்டால், அந்த சீட் வேறு நபருக்கு சென்றுவிடும். ஒரு கல்லூரியில், ஒரு பாடப்பிரிவை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பது கிடையாது. எத்தனை பாடப்பிரிவை வேண்டும் என்றாலும் தேர்வு செய்யலாம். அதேபோல், எத்தனை கல்லுாரி வேண்டும் என்றாலும் தேர்வு செய்து கொள்ளலாம். கவுன்சிலிங் குறித்த அனைத்து விபரங்களையும், www.tncaonline.org என்ற இணையதளம் வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.