தாய்லாந்தில் ஆராய்ச்சி படிப்பு : உதவித்தொகையுடன் அழைப்பு
கோவை: தாய்லாந்தின் பாங்காங்கில் ஏசியன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஏ.ஐ.டி.,) செயல்பட்டு வருகிறது. லாபநோக்கமற்ற சர்வதேச பல்கலையான இது, தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இங்கு, பொறியியல், பருவநிலை மாறுபாடுகள், எரிசக்தி, நீர்வளம் கணினி அறிவியல் உள்ளிட்ட நவீன பிரிவுகளில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.இப்படிப்புகளில் இந்திய மாணவர்களை பங்கேற்கச் செய்யும் விதமாக, இந்தோ ஏ.ஐ.டி., நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, ஏ.ஐ.டி., சார்பில், கோவையில் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில், ஏ.ஐ.டி., நீர்வளத்துறை பேராசிரியர் மோகனசுந்தரம், கணினி அறிவியல் துறை பேராசிரியர் சந்ரி போல்பிரசெர்ட், பருவநிலை ஆராய்ச்சித் துறை தலைவர் ஜெய் கோவிந்த் சிங், நானோ டெக்னாலஜி துறை இயக்குநர் பிரணேஷ் ஆகியோர் கூறியதாவது:உலகம் முழுதும் 90 நாடுகளில் இருந்து ஏ.ஐ.டி.,யில் பயில்கின்றனர். மிக விரிவான ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 6,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 600 பேர் தேர்வாகின்றனர். இதுவரை 2,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இங்கு பயின்றுள்ளனர். இந்திய மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்ய அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.இங்கு ஏராளமான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. பிராந்திய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியர்களுக்கு என பிரத்யேக கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.தமிழக அரசு, தனது மாணவர்களை வெளிநாடுகளில் பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன்அடிப்படையில், டிட்கோவுடன் இணைந்து ஏ.ஐ.டி.,யில் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளவும், மாணவர் பரிமாற்ற நிகழ்வுகள், வேலைவாய்ப்புகளில் தமிழக மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளோம். மாணவர்கள் மட்டுமல்லாது, பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகளுடனும் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம். இன்று கோவையில், இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடக்கிறது. டிட்கோ செயல் இயக்குநர் ஸ்வேதா சுமன் பங்கேற்கிறார்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.