பள்ளியில் தற்காப்பு பயிற்சி பழங்குடி மாணவிகள் ஆர்வம்
கூடலுார்: முதுமலை கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவிகள், தற்காப்பு பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு மற்றும் உடல் வலிமை அதிகரிக்கும் நோக்கில், மூன்று மாத சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் படி, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், 6 முதல் 9ம் வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.இவர்களுக்கு, கூடலுாரை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் பாபு கராத்தே, மல்யுத்தம், ஜூடோ பயிற்சிகளும் வழங்கி வருகின்றார். இப்பயிற்சி பள்ளியில் வாரத்தில், இரண்டு நாட்கள், இரண்டு மணி நேரம் நடைபெறுகிறது. பயிற்சி முகாமில், 60 பழங்குடி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தற்காப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, தே வையான வசதிகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.