உள்ளூர் செய்திகள்

சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்கள் நிராகரிப்பு

சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 15ம் நாளாக நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட, பகுதி நேர ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் கோரி, கடந்த 8ம் தேதி முதல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று, 15ம் நாளாக, 300க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., அலுவலகம் அருகே தண்டோரா அடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.இதற்கிடையே, சட்ட சபையில் நேற்று, பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இது குறித்து, பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் முரளி அளித்த பேட்டி:தமிழக சட்டசபையில், 110 விதிகளின் கீழ், முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என, எதிர்பார்த்தோம். ஆனால், தேர்தல் வாக்குறுதி போன்ற அறிவிப்பையே, முதல்வர் வெளியிட்டு இருக்கிறார்; இது வேதனை அளிக்கிறது. பணி நிரந்தரம் செய்து, அரசாணை வெளியிடும் வரை, எங்களின் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.இடைநிலை ஆசிரியர்கள் கைது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையின் பல்வேறு அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, இடைநிலை ஆசிரியர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 28ம் நாளாக, எழும்பூர், காந்தி இர்வின் சாலையில், 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வலியுறுத்தும், பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்தனர். மாலை விடுவிக்கப்பட்டனர். அதேபோல், போராட்டத்தில் பங்கேற்க, சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்த, 200 இடைநிலை ஆசிரியர்களை, ரயில் நிலையத்தில் வைத்து, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்