உள்ளூர் செய்திகள்

காலமுறை ஊதியம் வழங்க ஊர்ப்புற நுாலகர்கள் கோரிக்கை

கோவை: தமிழக அரசின் பொது நுாலகத் துறையின் கீழ், மாவட்ட மைய நுாலங்கள், கிளை நுாலகங்கள், பகுதிநேர நுாலகங்கள், ஊர்ப்புற நுாலகங்கள் என, 4661 நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 1915 ஊர்ப்புற நுாலகங்கள் உள்ளன.இந்த நுாலகங்கள் ஊராட்சிகளின் தலைமை இடங்களில் உள்ளன. இங்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் 1006 நுாலகர்கள் பணியாற்றி வருகின்றனர். நுாலகங்களை தரம் உயர்த்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பின் மாநில துணைத்தலைவர் நாகராஜன் கூறியிருப்பதாவது:15 ஆண்டுகளாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது வரை ஒரு நுாலகம் கூட தரம் உயர்த்தப் படவில்லை. குறைந்த சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு கூட இல்லை அரசு தரும் அட்வான்ஸ் கடன்களும் கிடைப்பதில்லை.2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க. வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன், சிறப்பு காலமுறை ஊதியதாரர்களை, காலமுறை ஊதியத்துக்கு மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியை வரும் தேர்தலுக்கு முன்பாகவாவது முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்