தினமும் செய்தித்தாள் வாசிப்பது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்
கோவை: செய்தித்தாள் வாசிப்பது வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும், என, சிரவையாதினம் குமரகுரு சுவாமிகள் பேசினார்.சரவணம்பட்டி அருகே சிரவையாதினம், ராமானந்த உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீகந்தசாமி மேல்நிலைப் பள்ளி பொன் விழாவையொட்டி, மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.செய்தித்தாள் வாசிப்பதன் அவசியம், போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சங்கிலி நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் சுஜாதா வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிரவையாதினம் குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது:செய்தித்தாள் என்பது புதிய சிந்தனையை வளர்க்கும் கருவி. புதிய செய்திகளை தினமும் தருகிறது. தினசரி நிகழ்வுகளை வரலாறாக மாற்றுகிறது.செய்தித்தாள் வாசிப்பது உங்களது வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் இளமையில் ஒழுக்கத்தை கற்றால், வாழ்நாள் முழுவதும் அதை கடைபிடிக்க உதவும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து மாணவ, மாணவியர் 'தினமலர்' நாளிதழ் செய்திகளை வாசித்தனர். எளிதாக 500 மாணவர்கள் ஒரே இடத்தில் 20 நிமிடம் அமர்ந்து செய்தித்தாள் வாசித்தது, ஐன்ஸ்டின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. நிகழ்ச்சியில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் செல்வம் தங்கம், சமுதாய சேவகர் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.