உள்ளூர் செய்திகள்

நுாற்றாண்டை தொட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி

ஆங்கிலேயர் ஆட்சியில் துவங்கப்பட்டு, நுாற்றாண்டை தொட்டு, சுற்றுவட்டார கிராம மாணவர்களுக்கு சிறந்த அடித்தளமாக, முருகன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளங்கி வருகிறது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1 தலைமை ஆசிரியர், 6 உதவி ஆசிரியர்கள், 1 கணினி ஆசிரியர், 2 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 210 மாணவர்கள் படிக்கின்றனர்.இப்பள்ளி கடந்த, 1926ல் தனிநபர் முயற்சியால், 5ம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியாக துவங்கப்பட்டு, கடந்த 1942ல் கஸ்துாரிபாய் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளியாக மாறியது.அப்போது ஆங்கிலேயர் ஆட்சி என்பதால் மாணவர்களுக்கு மதிய உணவாக சோள புட்டு, சோள உப்புமா வழங்கப்பட்டது.கடந்த, 1946ல் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு, கந்தசாமி உதவிபெறும் துவக்க பள்ளியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1972ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.கடந்த, 1975ல் இப்பள்ளி நடத்த முடியாமல் நல்லுார் ஒன்றியத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதிலிருந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் இயங்கி வருகிறது.இப்பள்ளிக்கு சுற்றியுள்ள முருகன்குடி, துறையூர், கணபதிகுறிச்சி, வெண்கரும்பூர், காரையூர் ஆகிய கிராமங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் ஆட்டோவில் வந்து மாணவர்கள் படித்து செல்கின்றனர்.மேலும் இப்பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் குறுவட்டம், மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய திறனறி தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இதே போன்று, மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளிக்கு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விருது வழங்கி, பாராட்டி உள்ளார். இதனால் இப்பள்ளிக்கு ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.கல்வி சாதனையே லட்சியம் நான் இப்பள்ளியில் கடந்த 2020ல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் படிக்க சிரமம் அடைந்தனர். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை இல்லை. மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உதவியுடன் கழிவறை, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. கூடுதல் வகுப்பறை கட்ட இட வசதியில்லாததால் மாடியில் இரண்டு வகுப்பறை ஏற்படுத்தப்பட்டது. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமித்தால் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். ஹைடெக் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களை கல்வியில் சாதனை பெற வைப்பதே ஆசிரியர்களாகிய எங்கள் லட்சியம்.- விஜி அனிகிரேஸ், தலைமை ஆசிரியர்.கலையரங்கம் கட்ட நடவடிக்கை தேவை நான் இப்பள்ளியில் கடந்த 1974ல் முதலாம் வகுப்பில் சேர்ந்தேன். இப்பள்ளியில் போதிய வகுப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இப்பள்ளியை மேம்படுத்த ஆசிரியர்களுடன், கிராம இளைஞர்களும் இணைந்து வகுப்பறை கட்டடங்களை புனரமைத்தோம். கடந்த, 2002ல், 67 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்தனர். தற்போது, 210 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர் சேர்க்கைக்கு பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி, தற்போது நுாற்றாண்டை தொட்டுள்ளது. இப்பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விழா எடுத்தால் கிராம மக்கள், பெற்றோர், மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். இப்பள்ளிக்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து 210 மாணவர்கள் வந்து படிக்கின்றனர். இப்பள்ளிக்கு கலையரங்கம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன், தமிழ்தேசிய பேரியக்க துணை தலைவர்.மாணவர் சேர்க்கை அதிகரிப்பு நான் இப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். இப்பள்ளிக்கு கழிவறை வசதியில்லாததால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர். கடந்த 2022ல் ஐந்தாம் வகுப்பு மாணவி மதிவதனி என்பவர் முதல்வர் ஸ்டாலினுக்கு, பள்ளிக்கு கழிவறை கட்டித்தர வேண்டும் என கடிதம் எழுதினார். அதையேற்று, பள்ளியில் புதிதாக கழிவறை கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. இப்பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறோம். - மணிமாறன், முன்னாள் பள்ளி மாணவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்