மணக்குள விநாயகர் கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் ஸ்வீப் திட்டத்தின் கீழ், மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரியின் வாக்காளர் கல்விக் குழு மற்றும் புதுச்சேரி ரோட்டரி கிலோயிங் ஸ்டார்ஸ் அமைப்பு மூலம் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து மனித சங்கிலி அமைத்து '100 சதவீத ஓட்டுப்பதிவு, ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்' போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கினர்.முதல் முறை வாக்காளர்கள் அனைவரும் பொறுப்பான வாக்காளர்களாக இருப்பதற்கான உறுதிமொழியை கையெழுத்திட்டு பதிவு செய்தனர்.மாணவர்கள் வண்ணமயமான கோலங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு கருத்துகளை காட்சிப்படுத்தி, ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.நிகழ்ச்சியில் ஸ்வீப் திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி கோவிந்தசாமி கலந்து கொண்டு, 'ஒரு ஓட்டு ஒரு அரசை உருவாக்கும் சக்தி உடையது' என வலியுறுத்தி, இளைஞர்கள் அறிவார்ந்த வாக்காளர்களாக உருவாக வேண்டும், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் இயக்குநர் வெங்கடாஜலபதி, புதுச்சேரி ரோட்டரி கிலோயிங் ஸ்டார்ஸ் அமைப்பின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கல்லுாரியின் வாக்காளர் கல்வி மைய நோடல் அதிகாரி கருணாகரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.