மொழி கணிதத் திறன் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு
புதுச்சேரி: பள்ளிகளுக்கு இடையிலான அடிப்படை மொழித்திறன், கணிதத் திறன் போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், வட்டம்-1ல் உள்ள 20 பள்ளிகளுக்கு இடையே அண்மையில் போட்டிகள் நடத்தப்பட்டன. பெத்திசெட்டிபேட்டை தியாகி நடேசன் அரசு துவக்கப் பள்ளியில் நடந்த இப்போட்டிகளில், மொழித்திறன் மற்றும் கணிதத் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, கல்வித்துறை வட்டம் - 1 பள்ளி துணை ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்தது. கல்வித்துறை பெண் கல்வி இயக்குநர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் கலந்து கொண்டார். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்.மாணவர்களின் அடிப்படை அறிவுத்திறனை வளர்ப்பதில் இது போன்ற போட்டிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். துவக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் ராமதாஸ், ஜெயந்தி, சீனுவாசன், கனிமொழி பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர். ஏற்பாடுகளை வட்டம் - 1ன் பள்ளி துணை ஆய்வாளர் அனிதா செய்திருந்தார்.