அரசு பள்ளி மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு
வால்பாறை: தமிழ்நாடு தொலைத்தொடர்பு கணக்கு நிதிப்பிரிவு அதிகாரிகள் நல அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.இந்த கல்வியாண்டில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் சிவன்றாஜ் தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கலந்து கொண்டு, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், "அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் பரிசு வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 206 அரசு பள்ளி மாணவர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது," என்றார்.