காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மாணவர்கள் கலந்துரையாடல்
திருப்பூர்: ஆங்கில விவாத போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுடன், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாணவர்கள், தொழில்துறையினரை அழைத்து, மாதம் ஒருமுறை, 'காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது. நேற்று, ஆறாம் வகுப்பு முதல், 10 ம் வகுப்பு வரை பயிலும், அரசு பள்ளி மாணவ, மாணவியர் குழுவுடன், கலெக்டர் மனிஷ் நாரணவரே கலந்துரையாடினார்.மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில், பள்ளிகளில், ஆங்கில விவாத போட்டிகள் நடத்தப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, அரசு பள்ளி மாணவர்கள், 28 பேர் பங்கேற்றனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல்; சமூக ஊடகங்களின் தாக்கம்; வகுப்பறை பாடங்கள், இணையவழி பாடங்களின் தன்மை; செயற்கை நுண்ணறிவு குறித்து கலெக்டருடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, கலெக்டர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.