உள்ளூர் செய்திகள்

பள்ளி விடுமுறையால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு

பழநி: கடந்த வாரம் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் டிச. 6க்குள் பிளஸ் 2 தனித்தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், மூன்று பாடங்களுக்கு குறைவாக தோல்வியடைந்தவர்களுக்கு அடுத்த சில நாட்களில் மறுதேர்வு நடத்தப்படுகிறது. பிற மாணவர்கள், அடுத்ததாக நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில், தனித்தேர்வர்களாக மட்டுமே பங்கேற்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்த பின், வீட்டில் இருந்தபடியே படித்து பிளஸ் 2 தேர்வு எழுதுவோரும் தனித்தேர்வர்களாகவே தேர்வு எழுதுவர். 2011 மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு, நவ. 24ல் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க, கல்வித்துறை டிச. 6 வரை அவகாசம் வழங்கியுள்ளது. நேரடியாக(பத்தாம் வகுப்பு முடித்து) பிளஸ் 2 தேர்வெழுதும் தனித்தேர்வர்கள், அருகில் உள்ள எந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடமும் சான்றொப்பம்(அட்டெஸ்டேஷன்) பெறலாம். ஆனால் கடந்த(பிளஸ் 2) தேர்வுகளில் தோல்வியடைந்து, தற்போது தனித்தேர்வர்களாக விண்ணப்பிப்போர், பிளஸ் 2 படித்த பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து மட்டுமே சான்றொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். தற்போது பெய்து வரும் தொடர்மழையால், பல மாவட்டங்களில் இந்த வாரத்தின் அதிகபட்ச நாட்கள் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே பள்ளி நடைபெறாத சூழலில், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை தபாலில் அனுப்பும்போது, மேலும் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படும். இப்பிரச்னையை கருத்திற்கொண்டு, அரசு தேர்வுத்துறை கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டுமென தனித்தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்