உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு இடஒதுக்கீடு தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு பற்றி  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி.,  வெளியிட்டது. இதில், 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அதிக மதிப்பெண்கள் பெறும் ஆண்களுக்கான தேர்வு மறுக்கப்படுகிறது. அவர்களின் அடிப்படை உரிமையும் மறுக்கப்படுகிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு பணியாளர் விதிகளில் வகை செய்கிறது. இந்த விதி சட்டவிரோதமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இன பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்பு சட்டம் தடுக்கிறது. எனவே, அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறியதாகும். குரூப் 1 பணியிடங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் எனது உரிமை, வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, அரசு பணியாளர் விதியை ரத்து செய்ய வேண்டும். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் குரூப் 1 பணியிடங்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க தடை கோரிய மனுவை ‘முதல் பெஞ்ச்’ தள்ளுபடி செய்தது. பூர்வாங்க மனுவுக்குப் பதிலளிக்க அரசுக்கும், டி.என்.பி.எஸ்.சி.,க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை நான்கு வாரங்களுக்கு  தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்