உள்ளூர் செய்திகள்

பணிநிரந்தர உத்தரவு இல்லாததால் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தவிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் இருந்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் ஒருபகுதியினருக்கு நியமன உத்தரவு வழங்கப்படாததால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆட்சியில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் தொகுப்பூதிய ஆசிரியர்கள் 2006 ஜூன் 1 ம் தேதி முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவை மாநில அளவில் இயக்குனரும், மாவட்ட அளவில் தொடக்க கல்வி அலுவலரும் பிறப்பித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட சில ஒன்றியங்களில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. சம்பளம் கிடைத்த போதும் மற்ற பயன்களை இந்த ஆசிரியர்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘ஜூன் 2006 ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு 2 ஆண்டுகால தகுதிகாண் பருவத்தையும் முடித்து விட்டோம். பணி நியமன உத்தரவு இல்லாததால், சமீபத்தில் நடந்த மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியவில்லை. நியமன உத்தரவு இல்லாவிட்டால் பல பாதிப்புகள் ஏற்படும். 2008 ஜூன் 1 ம் தேதி முதல், எங்களுக்கு தகுதி காண் பருவம் முடித்ததற்கான சான்று வழங்கப்பட வேண்டும். நியமன உத்தரவு இல்லாததால் இந்த சான்றும் கிடைக்காது’ என்றார். சிவகங்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வசந்தகுமாரி கூறுகையில், ‘பணி நிரந்தரத்திற்கு பிறகு மாநில அளவில் நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனித்தனியாக வழங்க வேண்டும் என அவசியம் இல்லை. உத்தரவு கிடைக்காத ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்