கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அண்ணா பல்கலை வலியுறுத்தல்
சென்னை: “கல்வி தொடர்பான செய்திகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வெளியிட வேண்டும்” என்று அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கேட்டுக் கொண்டார். அண்ணா பல்கலைக் கழகத்தின் ஊடக அறிவியல் துறை மற்றும் மாநில பள்ளிசாரா கல்விக் கருவூலம் ஆகியவை இணைந்து, ‘எழுத்தறிவு-வளர்கல்வி திட்டச் செயல்பாடுகளில் ஊடகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தின. துணைவேந்தர் மன்னர் ஜவகர் தலைமை வகித்து பேசியதாவது: முழுமையான எழுத்தறிவு வழங்குவதற்காக அரசுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு, ஆரம்பத்தில் இருந்து பத்திரிகைகள் ஆற்றி வரும் பங்கு அதிகம். கல்வி திட்டங்கள்,பரவலாக்கம் போன்வற்றில் ஊடகங்கள் இன்னும் அதிக அக்கறைச் செலுத்தினால், நாட்டின் கல்வியறிவு 100 சதவீதத்தை தொட்டுவிடும். கல்வி தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு மன்னர் ஜவகர் பேசினார். கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசுகையில், “பத்திரிகைகளிலும், சேனல்களிலும் கல்வி தொடர்பான செய்திகள் அதிகம் வருகின்றன. ‘தினமலர்’ நாளிதழ், 10ம் வகுப்பு,பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக 12 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பல ஆயிரம் மாணவர்கள் வருகின்றனர். அந்தளவிற்கு மாணவர்களிடையே ஒரு தேடல் இருக்கிறது” என்றார். ஊடக அறிவியல் துறை தலைவர் சுந்தரேஸ்வரன், மாநில பள்ளிசாரா கல்விக் கருவூல இயக்குனர் ராஜன், சென்னை வானொலி நிலைய இயக்குனர் சீனிவாச ராகவன், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் லட்சுமி உட்பட பலர் பேசினர்.