மெட்ரிக் மாணவர்களுக்கு இன்சூரன்ஸ் அரசு அதிரடி உத்தரவு
கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்திற்குப் பிறகு, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவதிலும், மாணவர்களின் பாதுகாப்பு விவகாரத்திலும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உஷாராக இருந்து வருகிறது. இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பள்ளிகள் அமைவிடம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை, எல்லா மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும். பெரும்பாலான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடுக்குமாடிக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. பாதுகாப்புக் கருதி, இதுபோன்ற அடுக்குமாடிக் கட்டடம் கொண்ட பள்ளிகளில் இடிதாங்கிக் கருவியை உடனடியாகப் பொருத்த வேண்டும். பள்ளிக் கட்டடத்திற்கும், மாணவ-மாணவிகளுக்கும் காப்பீடு செய்யும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். அறக்கட்டளை பெயர்களில் பள்ளியை நடத்தக் கூடாது. பள்ளியின் சொத்துக்களை, நிர்வாகிகள் பெயரில் பதிவு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை அமல்படுத்தாதப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. இவ்வாறு இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.