உள்ளூர் செய்திகள்

இளைஞர் விளையாட்டு திறன் மேம்படுத்தும் திட்டம் வீண்

உடுமலை: கிராமப்பகுதி இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், அரசு கொண்டு வந்த திட்டம் செயல்படாமல் முடங்கியுள்ளது. கிராமப்பகுதி மற்றும் நகர்பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில், எட்டு ஆண்டுகளுக்கு முன் ‘அரசு ஊரக இளைஞர் விளையாட்டு மையம்’ திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் 5 சென்ட் அளவில் அரசுக்கு சொந்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டன. இளைஞர்கள் விளையாடும் வகையில்  தனித்தனி மைதானங்கள் உருவாக்கப்பட்டு, தேவையான விளையாட்டு பொருட்கள் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஊரக விளையாட்டு மையங்களுக்கும் பல லட்ச ரூபாய் இதற்காக செலவிடப்பட்டது.  ஆனால், தொடர்ந்து இவை பராமரிக்கப்படாததால், பெரும்பாலான கிராமங்களில் உடற்பயிற்சி மையங்கள் முடங்கி உள்ளன. இந்நிலையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 50 ஆயிரம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. அதேபோல், 66 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், பொருட்களை பாதுகாப்பாக வைக்க வசதி செய்யப்படவில்லை. மைதானப்  பராமரிப்பு குறித்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. இதனால், பழைய திட்டம் போன்று இத்திட்டமும் காணாமல் போகக்கூடிய நிலை உள்ளது. விளையாட்டு பொருட்களை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க, மைதானத்திலேயே அறை கட்டவேண்டும். மைதானம் மற்றும் விளையாட்டு பொருட்களை பராமரிக்க ஒரு பணியாளரை  நியமிக்க  அரசு அனுமதி அளிக்க வேண்டும் என,  ஊராட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்