பிலிம் டெக்னாலஜி படிப்பில் சம்பளத்திற்கு எல்லை இல்லை
"மீடியா துறையில் பெருகி வரும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில், எஸ்.ஆர்.எம்., பிலிம் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் பாலாஜி பேசியதாவது:முதலில் இந்தத் துறையை பற்றிய தவறான கண்ணோட்டத்தை பெற்றோர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். பிலிம் டெக்னாலஜி படிப்பு படித்தால் பிள்ளைகள் கெட்டு விடுவார்கள் என நினைக்கின்றனர். மற்ற படிப்புகளை போலவே இதற்கும் மதிப்புள்ளது, கண்ணியமான வேலை வாய்ப்பும் உள்ளது. சினிமாத் துறை மட்டுமல்லாமல், டிவி, அச்சுத்துறை, பத்திரிகை, விளம்பரத் துறைகளைப் பற்றியும் இதில் படிக்கலாம். துறை சார்ந்த பணிவாய்ப்பும் பெறலாம். தமிழகத்தில் தற்போது 80 கல்லூரிகளில் பிலிம் டெக்னாலஜி படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. நல்ல படைப்பாற்றல் மிக்க மாணவர்களுக்கு இத்துறை பெரிய வரப்பிரசாதம். பெயரும், புகழும் எளிதாக கிடைக்கும். ஓரளவுக்கு அறிமுகமாகி விட்டால், சம்பளத்திற்கு வானம் தான் எல்லை. இதை தீர்மானிக்க வேண்டியது மாணவர்கள் தான். நமது உடை, கலாச்சசாரம், பேசும் தன்மை அனைத்திலும் மீடியாக்களின் ஆதிக்கம் ஊடுருவியுள்ளது. பி.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன், இதழியல், எலக்ட்ரானிக் மீடியா, பிலிம் டெக்னாலஜி படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால், அனிமேட்டர், குறும்பட இயக்குனர், திரைப்பட இயக்குனர், நிருபர், போட்டோகிராபர், விளம்பர பிரதிநிதிகளாகலாம். சுய வேலைவாய்ப்பும் அதிகமாக உள்ளது, என்றார்.