பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் எளிதாக இருந்தது
ஏ.அய்யம்மாள், ஆசிரியை, அரசு உயர்நிலைப் பள்ளி, வன்னிவேலம்பட்டி: சராசரி மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெறலாம். அனைத்து வினாக்களும் நேரடியாக இருந்தன. இரண்டு மதிப்பெண் வினாக்கள் அடிக்கடி கேட்கப்பட்டவையே. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கேட்ட பெரிய வினாக்கள் பலவும் வந்திருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் மட்டும் அடிக்கடி கேட்காதவை என்றாலும், எளிமையானவையே. படிப்பில் பின்தங்கிய மாணவர்களும் உரைநடை பாடபகுதியை எளிதாக எழுதியதாக மகிழ்ச்சி தெரிவித்தனர், என்றார். அதே பள்ளியின் மாணவர் செ.முத்துராஜ் கூறியதாவது: வினாக்கள் எளிமையாக இருந்ததால் அனைத்துக்கும் விடையளித்து விட்டேன். மூன்று திருப்புதல் தேர்வுகளிலும் கேட்கப்பட்ட வினாக்கள் அதிகம் வந்திருந்தது. எனவே 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற அதிக வாய்ப்புள்ளது. பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் எதுவும் விலகியதாக இல்லை. நேரடியாகவே இருந்தன. எளிமையான வினாக்கள் என்பதால் விரைவாக எழுதி, குறித்த நேரத்திற்குள் முடித்துவிட்டேன், என்றார்.