கனடா கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேராத 20 ஆயிரம் இந்திய மாணவர்கள்
ஒட்டாவா: கடந்த ஆண்டு கனடாவில் கல்வி பயில இடம் கிடைத்தும் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள், கல்வி நிறுவனங்களில் சேராதது தெரியவந்துள்ளது.வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் பெரும்பாலானோரின் விருப்பத் தேர்வாக கனடா உள்ளது. அதேநேரத்தில், கனடா சென்று அங்கிருந்து அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், 144 நாடுகளில் இருந்து கல்விக்காக கனடாவிற்கு வந்தவர்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.அதில் 50 ஆயிரம் பேர் தங்களது கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் சேரவில்லை. அவர்களில் 19,582 பேர் இந்திய மாணவர்கள் என கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடிமக்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.பிலிப்பைன்சில் இருந்து வந்தவர்களில் 688 பேர், சீனாவில் இருந்து வந்தவர்களில் 4,279 பேர் ஆகியோர் படிக்க விசா பெற்று கனடா வந்தும் கல்வி நிறுவனங்களில் சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.