நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 3ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 3ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்டாக் நீட் அல்லாத இளநிலை தொழிற்படிப்புகள், கலை அறிவியல், வணிகவியல், நுண்கலை படிப்புகளுக்கான சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 14ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வரவேற்கப்பட்டு வருகின்றன. மாணவ மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை 7,344 மாணவர்கள் சென்டாக் இணையதளத்தில் தங்களது விண்ணப்பப் படிவங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.வரும் 29ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் 3ம் தேதி மாலை 5 மணி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வருவாய் துறை அலுவலகங்களில் குவிந்து வரும் சூழ்நிலையில் இந்த கூடுதல் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.நீட் அல்லாத தொழில்முறை டிகிரி, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் அனைத்தும் நெட் பேக்கிங், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, யு.பி.ஐ., உள்ளிட்ட ஆன்லைன் வழிகளில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.