திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகள் அங்கீகாரத்துக்கு ரூ.300 கோடி லஞ்சம்!
சென்னை: 'அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தடையில்லா சான்றுக்கு, தனியார் பள்ளிகளிடம் கடந்த ஐந்தாண்டுகளில், 300 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது' என, தனியார் பள்ளிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே, தொடர் அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று கிடைத்து வந்தது.தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு வந்ததும், எவ்வித கட்டணமும் இல்லாமல் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பணம் இல்லாமல், இது வரை அங்கீகாரம் வழங்கியதே கிடையாது.ஒவ்வொரு பள்ளிக்கும், 35 லட்சம் ரூபாய் வரை பணம் பெறப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில், அங்கீகாரத்துக்காக, தனியார் பள்ளிகளிடம் மொத்தம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலிக்கப்பட்டது. இந்த லஞ்சப்பணம், சென்னை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெறப்பட்டது.பள்ளிக்கல்வி துறை முன்னாள் அமைச்சர் மகேஷின் நண்பரான, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவராக இருந்த முத்துகுமார் சொன்ன பின்னரே, 38 மாவட்ட கல்வி அலுவலர்களும் அங்கீகாரம் வழங்குவர். அவர்களுக்கும் தொகை கைமாறியது.கடைசி இரண்டு ஆண்டுகளில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி துறை இயக்குனரக அலுவலகத்தில் வைத்தே பணம் வசூலிக்கப்பட்டது. முதல் மாடியில் இயக்குனர் அலுவலகம் உள்ளது. இரண்டாவது மாடியில் பணம் வசூலிக்கப்பட்டது.அதே போல், கடந்த ஆட்சியில், 'பெற்றோரை கொண்டாடுவோம்' எனக்கூறி, பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு நடத்தினர்.மாநாட்டு மலர் வெளியிட, ஒவ்வொரு பள்ளியிடமும், 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. அதே போல, தி.மு.க., கட்சி பொதுக் கூட்டத்துக்கு, தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்பட்டன.அதற்கான எரிபொருள் செலவுகளை பள்ளிகளே ஏற்றுக் கொண்டன. அதிகாரிகளும் அதற்கு உடந்தையாக செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.