முறையற்ற வகையில் துணைவேந்தர் நியமனம் தடுக்கப்படுமா?
மதுரை: "தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நியமனத்தில் பணமும், அரசியலும் விளையாடுகிறது&'&' என தமிழ்நாடு அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. "பல்கலைக்கழகங்களில் ஊழல் ஒழிப்பு" என்ற தலைப்பில் மதுரையில் நடந்த கருத்தரங்கில், தேசிய கூட்டமைப்பு தலைவர் ஜேம்ஸ் வில்லியம் பேசியதாவது, "பல்கலை மானியக்குழு வழிகாட்டுதலின் படி நேர்மையான, ஊழலற்ற துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்போது நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் அவர்கள் சார்ந்த துறையில் ஆய்வு அனுபவம் இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களால் கல்வித்துறையில் மாற்றம் ஏற்படாது. மதுரை காமராஜ் பல்கலை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை, திருநெல்வேலி மனோன்மணீயம் பல்கலை, கொடைக்கானல் அன்னை தெரசா மற்றும் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகங்களில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பல்கலைகளில் கல்வியில் சிறந்த தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்றார். கூட்டமைப்பு அமைப்பாளர் கிருஷ்ணசாமி பேசியதாவது, "தமிழக பல்கலை துணைவேந்தர் நியமனங்களில் அதிகளவு பணமும், அரசியலும் விளையாடிக் கொண்டிருக்கிறது. தற்போது அரசியலைத் தாண்டி, கோடிக்கணக்கில் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியைப் பெறும் நிலைமை உள்ளது. பணம் கொடுத்து பதவியைப் பெறுபவர்கள் ஆசிரியர்கள் நியமனம், பதவி உயர்வு, யு.ஜி.சி., நிதி, கல்லூரிகளில் புதிய படிப்பு அறிமுகம், கல்லூரிகள் இணைக்கப்படுவது என அனைத்திற்கும் பணம் வாங்குகின்றனர். இதனால், தமிழகத்தின் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ளது. லட்சத்தில் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி பெற்றவர்கள், மீண்டும் அந்தப் பதவியை தக்கவைக்க கோடிகளை கொட்டுகின்றனர். இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும்" என்று பேசினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் பெருமாள், விவேகானந்தன், சீனிவாசன், ஜெயக்குமார் ஆகியோரும் பேசினர். மேலும், 14 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.