ஐந்தாண்டுகளில் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை
தி.மு.க., ஆட்சி நடந்த, கடந்த ஐந்தாண்டுகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் கல்வி நிலை குறித்து அறிக்கை தர, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2006 - 2011 வரையிலான கல்வியாண்டுகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, பள்ளி வாரியாக இவ்விவர சேகரிப்பில் தலைமையாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரத்தியேக (கோ-ஹார்ட்) படிவத்தை அரசு வழங்கியுள்ளது. இதில், மாணவர்களின் முழுமையான கல்வித்தகுதி நிலவரம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மாணவரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், ஜாதி மற்றும் கல்வியாண்டு வாரியாக, சம்பந்தப்பட்ட மாணவரின் கல்வித் தரம், பள்ளிக்கான வருகை நிலை குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன. மேலும் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியுள்ளாரா? படிப்பை தொடர்பவரா, அதற்கு முன்னதாகவே படிப்பை நிறுத்திவிட்டாரா? அதற்கான காரணம் என்பது உள்ளிட்ட விவரங்கள் இதில் கேட்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட கல்வியாண்டுகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வித் தகுதி நிலவரத்தைச் சேகரித்து, அறிக்கை தர தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.