கல்விக்கடன் பெற கண்ணீர் விடும் பெற்றோர்
நன்கு படிக்கும், திறமையான மாணவர்களின் கல்விக்கனவு, வறுமையால் தடைபடக்கூடாது, என்பதற்காக வங்கி கல்விக்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு லட்சம் ரூபாய் வரையான கல்விக் கடனுக்கு, மூன்றாம் நபர் ஜாமீன் தேவையில்லை. சொத்துப்பிணையம் வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து செலவுக்கும் வங்கியே கடன் தரலாம், என ரிசர்வ் வங்கி அறிவறுத்தியுள்ளது. மேலும் 2009 ஏப்., 1க்கு பிறகு உள்நாட்டில், தொழிற்படிப்புக்கு கடன் பெறும் மாணவர்கள் வட்டி செலுத்த வேண்டியதில்லை. ஆண்டுக்கு 4.5 லட்சத்திற்குள் வருமானம் இருக்க வேண்டும். வட்டிதொகையை மத்திய அரசு, வங்கிகளுக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டது. வட்டி விகிதத்தை தவிர, மற்ற நடைமுறைகள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், கல்விக்கடன் கேட்கும் போது, எங்களுக்கு அரசாணை வரவில்லை. கல்விக்கடன் முழுதும் தரமுடியாது. கடன் வேண்டுமானால் மூன்றாம் நபர் ஜாமீன், சொத்துபிணையம் வேண்டும், என, சில வங்கி அலுவலர்கள் நெருக்குகின்றனர். எதுவுமில்லாத பெற்றோரின் பிள்ளைகளுக்கு கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. தொழிற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புக்கு வட்டி சலுகை இருந்தும், பெற்றோர்களிடம் கறாராக வட்டி கட்ட சொல்கின்றனர். வட்டி செலுத்தினால் தான், கல்விக்கடன் தர முடியும் என பயமுறுத்துகின்றனர். வட்டி சலுகை பெறுவதற்கு, ஒரே ஒருமுறை வருமானச் சான்றிதழ் சமர்ப்பித்தால் போதும். ஆனால், ஆண்டுதோறும் வேண்டுமென இழுத்தடிக்கின்றனர். கல்விக்கடன் பெறுவதற்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டாம். ஆனால் சில வங்கிகள், அதிகம் படிக்காத பெற்றோர்களை இன்சூரன்ஸ் விஷயத்தில் ஏமாற்றுகின்றனர். உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், இன்சூரன்ஸ் தொகையை கடனுக்கு ஈடாக கட்டி விடலாம் என பயமுறுத்தி, இன்சூரன்ஸ் தொகையை வசூலிக்கின்றன. இதிலும் கொடுமை என்னவென்றால், குறைந்த பட்ச பிரிமீயத் தொகைக்கு பதிலாக, பங்குசந்தையில் பயன்படுத்தப்படும் அதிகபட்ச (யுலிப் பாலிசி) இன்சூரன்ஸ் தொகையை வசூலிக்கின்றன. இதன்மூலம் கமிஷன் தொகையும் பெறுகின்றனர். விவரம் தெரியாத பெற்றோர், தொடர்ந்து இன்சூரன்ஸ் செலுத்த முடியாமலும், கல்விக்கடன் பெறமுடியாமலும் கண்ணீர் விடுகின்றனர். கடனுக்கான அனுமதி கடிதமும் வழங்குவதில்லை. ஒரு சில வங்கி அலுவலர்களின் இத்தகைய செயல்பாட்டால், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எந்த படிப்பாக இருந்தாலும், வங்கிகளிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். அதில் கடன் வாங்குபவர் பெயர், முகவரி, நோக்கம், கல்வி விவரம், படிக்கும் காலத்திற்கான மொத்த தொகையின் திட்டமதிப்பீடு, தரப்படும் கடன்தொகை, கடன் பட்டுவாடா செய்யும் விதம், வட்டி மானியம் குறித்த தகவல், சொத்துபிணையம் தேவையா, திருப்பி செலுத்தும் காலம் என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதப்பட வேண்டும். வங்கி அலுவலர்களிடம் இந்த அனுமதி கடிதத்தை முதலில் பெற்று, அதில் ஏதேனும் விதிமீறல் இருந்தால், அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.