உள்ளூர் செய்திகள்

‘மாணவர்களுக்கு பொதுக்கல்வியுடன் தொழிற்கல்வி கற்றுத்தர வேண்டும்’

கடலூர்: மாணவர்களுக்கு பொதுக்கல்வியுடன் தொழிற்கல்வியை அவசியம் கற்றுத்தர வேண்டும் என  டாக்டர் மகாலிங்கம் பேசினார். சென்னை மாகாண முன்னாள் பிரதமர் ஓ.பி.ஆரின் 38ம் ஆண்டு நினைவு நாள் விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா வடலூர் டாக்டர் மகாலிங்கம் அரங்கில் நடந்தது. வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய தலைவர் டாக்டர் மகாலிங்கம் தலைமை தாங்கி ஓ.பி.ஆரின் உருவப் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:கடந்த 1969ம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது. 30 ஆண்டுகள் கழித்து மழலையர் தொடக்கப்பள்ளி, ஆசிரியர் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நர்சிங் கல்லூரி துவங்கப்பட உள்ளது. சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் கல்வி, வேலை, குடியிருக்க இடம், மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. தமிழகத்தில் 30 சதவீதம் பேருக்கும், வட மாநிலத்தில் 60 சதவீதம் பேருக்கும் கல்வி கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியது போல் நகரத்தில் கிடைக்கும் வசதி கிராமத்தில் கிடைக்கவில்லை. காஷ்மீர் பகுதியில் ஏற்படும் பிரச்னையை சமாளிக்க ராணுவத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிலையை போக்க சொட்டுநீர் பாசனம், நிலத்தடிநீர் பாசனம் போன்ற திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நதிகளை இணைக்கும் விஷயத்தில் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காந்தியடிகள் சொன்னது போல் நெசவு, விவசாயம் போன்ற தொழிலை பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெருக்கிக் கொள்ள வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு பொதுக்கல்வியுடன் தொழிற்கல்வியை அவசியம் கற்றுத்தர வேண்டும். இவ்வாறு தலைவர் டாக்டர் மகாலிங்கம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்