மருத்துவ சேர்க்கை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர்
கலந்தாய்வில் பங்கேற்று, அரசு கல்லூரிகளில் இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர், ஜுலை 22ம் தேதி அந்தந்த கல்லூரிகளில் உரிய சான்றிதழ்களுடன் சென்று, மருத்துவ உடல் பரிசோதனையில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமையன்று அந்தந்த கல்லூரிகளில், மாணவ, மாணவியர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களது சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. ஒரு சில மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை கடிதம் பெற்ற அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்குச் சென்று சேர்ந்துவிட்டனர். ஆனால், ஒரு சில கல்லூரிகளில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் சேரவில்லை. சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேர்க்கை பெற்ற அனைத்து மாணவர்களும் நேற்யை தினம் வந்து சேர்ந்துவிட்டனர். ஆனால், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவி மட்டும் சேரவில்லை. இதுபோல், எந்தெந்த கல்லூரிகளில் எத்தனை காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த முழு விவரம் 25ம் தேதியன்று மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு தெரிந்துவிடும். அதன் அடிப்படையில் வரும் 28ம் தேதியன்று துவங்க உள்ள இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.