உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான ஆன்லைன் திறனாய்வுத் தேர்வு

சென்னை: மாணவர்கள் தங்களின் உள்ளார்ந்த திறன் மற்றும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த, தேசிய அளவிலான ஒரு ஆன்லைன் திறனாய்வுப் போட்டியை EFest என்ற பெயரில் www.worldcolleges.info என்ற இணையதளம் வருடாவருடம் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த 2011ம் ஆண்டுக்கான EFest 2011 போட்டி நடத்தப்படவுள்ளது. www.worldcolleges.info என்பது உலகம் முழுவதுமுள்ள மாணவர் சமுதாயத்திற்கு, கல்வி மற்றும் எதிர்கால தொழில் தொடர்பான தகவல்களைத் தரும் ஒரு தளமாகும். கிராமப்புற மாணவர்கள், தங்களின் திறன்களை உணர்ந்து, அதன்மூலம் அவர்களின் தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கான நோக்கத்தை இந்த இணையதளம் கொண்டுள்ளது. கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் படித்துக்கொண்டிருப்பவர்கள், இந்த திறனாய்வுப் போட்டியில் கலந்துகொள்ளலாம். இதில் மொத்தம் 4 பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கென எந்த நுழைவுக் கட்டணமும் இல்லை. இப்போட்டியில், முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களுக்கு, ரூ.3 லட்சம் மதிப்பு வரையிலான பரிசுகள் வழங்கப்படும். இந்தப் பரிசுகள் புகழ்பெற்ற கல்வியாளர்களால், அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வைத்து வழங்கப்படும். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அதிகளவிலான மாணவர்களைக் ஊக்குவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கும், அந்த நிகழ்ச்சியின்போது, விருதுகள் வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் www.worldcolleges.info/College/efest2011/ என்ற இணையதளத்தில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பதிவு செய்யலாம். பதிவு செய்பவர்களுக்கு User ID மற்றும் Password ஆகியவை வழங்கப்படும். போட்டியின் 4 பிரிவுகளின் விபரங்கள்: முதல்நிலை - ஜுலை 30 முதல் ஆகஸ்ட் 6 வரை - ஆன்லைன் IQ டெஸ்ட் அரித்மேடிக், லாஜிக்கல் ரீசனிங் மற்றும் சைக்காலஜி, வெர்பல், ஆப்டிடியூட் ஆகியவைத் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இரண்டாம் நிலை - ஆகஸ்ட் 10 முதல் 15 வரை - Online Brain Bench ஒரு மாணவரின் மொழித்திறன்(English - Verbal Reasoning), அவரின் சிந்தனை எல்லை, புதிர்கள் மற்றும் தொழில்நுட்பத் தேர்வு(OS, Internet and Opensource) போன்றவை இதில் அடங்கும். மூன்றாம் நிலை - ஆகஸ்ட் 18 முதல் 31 வரை - E-paper presentation முதல் 2 நிலைகளில் தேறிய மாணவர்கள், தங்களது ஈ-பேப்பர்களை, சம்பந்தப்பட்ட இணையதளத்தின் கோப்பு பதிவேற்ற செயல்பாட்டின் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த பேப்பரில், தொழில்நுட்பத்தின் அடிப்படையில், நடைமுறைத் தீர்வுடன், ஒரு எதிர்கால அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், பருவநிலை, தண்ணீர், விவசாயம், மாசுபாடு, இணையதளம் போன்ற இன்றைய முக்கிய உலகப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கூற வேண்டும். மேற்கூறிய அனைத்திற்குமோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றுக்கோ தீர்வுகளைக் கூறலாம். நான்காம் நிலை - இறுதித் தேர்வு - செப்டம்பர் மாதம் இந்தத் தேர்வு ஒரு தேசிய மாநாடு என்ற அளவில் பிரமாண்டமாக நடைபெறும். இதில், குழு கலந்தாய்வு, நிபுணத்துவ மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை இடம்பெறும். இந்த தேர்வானது, புகழ்பெற்ற கல்வியாளர்கள் மற்றும் ஐ.டி. துறை நிர்வாகிகளால் நடத்தப்படும். இந்த இறுதிநிலைத் தேர்விலிருந்து மொத்தம் 200 மாணவர்களைத் தேர்வுசெய்து, அவர்களின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதமாக இலவசப் பயிற்சி வழங்கப்படும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணாக்கர்களின் தனிப்பட்ட மற்றும் கல்வி விபரங்கள், முக்கியமான ஐ.டி. மற்றும் பிற துறை நிறுவனங்களுக்கு, அவர்கள் இத்தகைய அறிவார்ந்த மாணவர்களை தேர்வுசெய்ய விரும்புகையில் வழங்கப்படும். இதைப்பற்றி மேலும் விவரங்களை அறிந்துகொள்ள www.waterandclimatefuture.com என்ற இணையதளம் செல்லவும். இந்த முழு நிகழ்வும் World Education Vision மற்றும் Apple G Web Technology Private Ltd., Chennai என்ற நிறுவனங்களின் துணையுடன் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியைப் பற்றிய ஒட்டுமொத்த விவரங்களை அறிந்துகொள்ள www.worldcolleges.info/College/efest2011/ என்ற இணையதளம் செல்லவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்