மனிதவளம் தொடர்பான எம்.பி.ஏ. படிப்பின் வாய்ப்புகள்
நபர்களை சிறப்பாக நிர்வகிப்பது, அவர்களின் மேம்பாடு, உற்சாகப்படுத்தல் மற்றும் பயிற்சியளித்தல் போனறவை ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய அம்சங்கள். இந்த வகையில் மனிதவளத் துறை பெரும்பங்கு வகிக்கிறது. இத்துறையில் எம்.பி.ஏ. படித்தவர்கள், ஒரு நிறுவனத்தின் அனைத்துவித நடவடிக்கைகளிலும் பங்கேற்கிறார்கள். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இவர்களுக்கான பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. இவர்களுக்கான சில பணி நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, *Human resource manager *Policy development and planning *workplace training and development *consultant, *Strategic human resource management *Industrial relations practitioner *Recruitment and selection *International HR practitioner *Change management professional *OH and S practitioner *Administrative services management *Employee relations adviser மனிதவளத் துறை என்பது 2 முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜெனரலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் என்பதுதான் அது. முதல் வகையைச் சேர்ந்த மனிதவளத் துறை அலுவலர், ஒரு குறிப்பிட்ட வேலையில் கவனம் செலுத்தாமல், அனைத்து வகைப் பணிகளையும் பொதுவாக செய்பவர். ஆனால் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர், ஒரு குறிப்பிட்ட சில பணிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். ஆட்களை எடுத்தல் அல்லது பயிற்சியளித்தல் அல்லது சம்பளம் வழங்குதல் என்பனவற்றில் ஏதோ ஒரு பணியை அவர் செய்வார். சில சிறிய நிறுவனங்களில், ஒரு சில நபர்கள் மட்டுமே மனிதவளத் துறையில் இருப்பார்கள். அவர்களே அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொள்வார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களில்தான் மேற்கண்ட பிரிவுகள் இருக்கும். இத்துறையில் எம்.பி.ஏ. முடித்த ஒருவர், ஜெனரலிஸ்ட் என்ற பிரிவில் வந்தாலும், ஏதேனும் ஒரு பிரிவில் அவர் ஸ்பெஷலிஸ்ட் படிப்பை படித்து, அதற்கேற்ப செயல்பட முடியும். அத்தகையவர்கள், கீழே கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பணியாற்றலாம். ஆட்களை எடுத்தல் மற்றும் பணியமர்த்துதல் மேலாளர்கள் விளம்பரங்கள், வேலை வாய்ப்பு நிறுவனங்கள், வேலை வாய்ப்பு வலைத்தளங்கள், கல்லூரி வளாகங்கள் போன்ற பலவற்றிலிருந்து வேலைக்கான ஆட்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவற்றை நடத்தி, நிறுவனத்திற்கு ஏற்ற பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியை இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆட்கள் எடுக்கும் பணியிலுள்ள பலவித வேலைகளை பிரித்து செய்கிறார்கள். கற்றல் மற்றும் மேம்பாட்டு ஸ்பெஷலிஸ்ட் பகுப்பாய்வு செய்தல், திட்டமிடுதல், மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல், பயிற்சியளித்தல் போன்ற பணிகள் இந்த நிலையில் நடைபெறுகிறது. பணியாளர்களுக்கு தேவைப்படும் வேலைத்திறன் மற்றும் மேம்பாட்டிற்கு, பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்கிறார்கள். எனவே அவர்கள், பயிற்சி உபகரணங் கள், செயல்முறைகள், பயிற்சிக் குறிப்புகள் போன்றவைகளை தயாரிக்கிறார்கள். பயிற்சியானது பலநிலைகளில் உண்டு. விற்பனை நுட்பங்கள் முதல் பாதுகாப்பு அம்சங்கள் வரையும், கணினி திறன்கள் முதல் குழு அமைப்பு வரையும் பல நிலைகளில் பயிற்சிகள் உண்டு. மேலும், ஆலோசகர், தொழில் திட்டமிடுநர், இளநிலை பயிற்சி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் முதுநிலை பயிற்சி ஸ்பெஷலிஸ்ட் என்ற பல நிலைகளில் இத்துறை பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஊதியத்துறை ஸ்பெஷலிஸ்ட் இத்துறை நிபுணர், பணி மதிப்பாய்வு அமைப்பை நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறார். சம்பள அமைப்புகள், வடிவமைப்பு மற்றும் நிர்வாக ஊக்கத்தொகைகள், பங்கு விருப்பங்கள், வேறுபட்ட ஊதியங்கள், நிர்வாக நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்வற்றை இத்துறை நிபுணர்கள் நிர்வகிக்கிறார்கள். பெனிபிட் ஸ்பெஷலிஸ்டுகள், அவற்றைப் பற்றிய தகவல்களை பணியாளர்களுக்குத் தருவதோடு, ஆலோசனைகளையும் தருகிறார்கள். இந்த பெனிபிட் திட்டத்தை அவர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள். பெனிபிட் நிர்வாகி, பெனிபிட் திட்ட பகுப்பாய்வாளர், குழு இன்சூரன்ஸ் மேலாளர், பணியாள் உதவி திட்ட மேலாளர் போன்ற பல்வேறு பணி நிலைகள் இப்பிரிவில் உள்ளன. ஊழியர் மற்றும் தொழிலாளர் தொடர்பு ஸ்பெஷலிஸ்ட் பணியாளர்-நிர்வாக உறவுகளை ஏற்படுத்தி, அதை நிர்வகிப்பது இத்துறையின் முக்கியப் பணியாகும். ஊழியர் தொடர்பு ஸ்பெஷலிஸ்ட் என்பவர், பணியின் தரம், ஊழியர் குறைகள் போன்றவைகளில் கவனம் செலுத்த, தொழிலாளர் தொடர்பு ஸ்பெஷலிஸ்டோ, தொழிற்சங்க ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் முறைப்படியான குறைதீர்ப்பு விஷயங்களை கையாள்வது போன்றவற்றை செய்கிறார். இந்தப் பிரிவில், தொழிலாளர் தொடர்பு அதிகாரி, தொழிலாளர் ஆலோசகர், மீடியேட்டர், பேச்சுவார்த்தை நடத்துபவர் மற்றும் தொழிற்சாலை உறவுகளின் இயக்குநர் போன்ற பல பணி நிலைகள் உள்ளன. சுகாதாரம், பாதுகாப்பு ஸ்பெஷலிஸ்ட் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுதல், விபத்து விவரங்கள் மற்றும் பாதுகாப்பு பதிவு அறிக்கைகள் சேகரித்தல், அரசு அறிக்கைகளை தயார் செய்தல் மற்றும் அரசு அலுவலகங்களுடன் தேவைப்படும் தொடர்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை இத்துறை நிபுணர் மேற்கொள்கிறார். பாதுகாப்பு ஸ்பெஷலிஸ்ட், செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பணியாளர் நல மேலாளர்கள் போன்ற பல பணி நிலைகள் இப்பிரிவில் உள்ளன. பிறவகை மனிதவளத்துறை ஸ்பெஷலிஸ்டுகள் தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சிகள், அரசு ஏஜென்சிகள், மனிதவள ஆலோசனை மையங்கள், எக்சிகியூடிவ் சர்ச் மையங்கள், அவுட்பிளேஸ்மென்ட் மையங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்கள். மனிதவள தகவல் அமைப்பு ஸ்பெஷலிஸ்ட், பணியாளர் உதவி ஆலோசகர், பணியாளர் உதவி திட்ட மேலாளர், பணியாளர் தொடர்புகள் மேலாளர், சமமான பணி வாய்ப்பு பிரதிநிதி போன்ற பல நிலைப் பணிகள், இப்பிரிவில் உள்ளன.