பேஷன் டெக்னாலஜி துறையின் வளர்ச்சிகளும், வாய்ப்புகளும்
இதனுடன் சேர்த்து நகை வடிவமைப்பு, அலங்காரம், லெதர் பொருட்கள், புகைப்படம், மாடலிங் போன்ற துறைகளும் பாஷன் டிசைனிங்குடன் நெருங்கிய தொடர்புடையவை. இத்துறைக்கு மிகுந்த அழகுணர்ச்சியும், புதிய சிந்தனைகளை உருவாக்கும் எண்ணமும், திறமையும் அத்தியாவசிய குணங்களாகக் கருதப்படுகிறது. மாறிவரும் இந்தியப் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலை காரணமாக இன்றைய இளைஞர்கள் இத்துறைக்குக் காட்டும் ஈடுபாடு பெரிதும் அதிகரித்துள்ளதுடன் இத்துறைக்கான வாய்ப்புகளும் மிகப்பிரகாசமாகவே இருக்கிறது. உலகெங்கும் இந்திய பட்டு, கைத்தறி, பளிச்சென்ற வண்ணங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் உள்ளது. இதனால் பாஷன் டிசைனிங் துறையில் இந்தியா உலகின் ஒரு மிக முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. ஆடை வடிவமைப்பு: பேஷன் டிசைனிங்கின் மிக முக்கியமான பிரிவாகக் கருதப்படும் ஆடை வடிவமைப்பில் ஆடைகளை வடிவமைத்தல், துணிகளை வெட்டுதல், வெட்டிய துணிகளை தைத்தல், வடிவமைக்கப்பட்ட ஆடைகளை வணிகத்திற் கேற்றபடி தயார் செய்தல் போன்ற முக்கியப் பணிகள் உள்ளன. உற்பத்தி செய்த ஆடைகள் பாஷன் ஷோக்களின் மூலமாகவும் விளம்பரம் மற்றும் குறிப்புகளின் மூலமாகவும் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. பாஷன் என்பது இன்று அந்தஸ்தின் சின்னமாக இருப்பதோடு சமூக ஈடுபாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது. இன்று இந்தியாவின் ஆடைகளுக்கு உலகெங்குமுள்ள ஆர்வம் இந்த பாஷன் டிசைனர்களால் தான் ஏற்பட்டுள்ளது. துறையில் வளர என்ன தேவை?பாஷன் டிசைனர்களாக விரும்புபவர்கள் கலா ரசனையுடையவர்களாகவும் சுய சிந்தனையுடன் புதிய வடிவங்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். புதிய வண்ணங்கள், தீற்றல்கள் மற்றும் ரகங்களை இணைக்கும் திறமைகளும் இருக்க வேண்டும். நல்ல கற்பனை சக்தியும் வடிவங்களை கற்பனையிலேயே உருவகப்படுத்திக் காணும் திறனும் இருந்தால் இத்துறையில் சிறந்து விளங்க முடியும். மேலும் சந்தையின் தேவைகளை அறிந்திருப்பதும் பாஷன் பற்றிய பரந்த விழிப்புணர்வும் கட்டாயம் தேவை. பன்னாட்டு இதழ்களைப் படிப்பது, வரலாறு மற்றும் கலை ஈடுபாடு போன்ற பண்புகளும் இருக்க வேண்டும். கலாச்சார மையங்களுக்குச் செல்லுதல், பாஷன் கண்காட்சிகளைப் பார்வையிடுதல் ஆகியவை நம் திறன்களை வளர்க்கும். துணிகளின் தன்மையை வேறுபடுத்திப் பார்க்கும் ஆற்றலும் துணித் தேர்வு போன்ற திறன்களை கூடுதலாக வளர்த்துக் கொள்ள வேண்டும். நாமே உருவாக்கும் சுய மாதிரிகளும் கண்டுபிடிப்புகளும் துறையில் நம்மை மிளிரச் செய்யும். துறைப் பிரிவுகள் டிசைனிங் பிரிவில் டிசைனர்கள், கட்டிங் அசிஸ்டண்ட், ஸ்கெட்சிங் அசிஸ்டண்ட், ஜூனியர் டிசைனர்களின் உதவியுடன் அதிக அளவு ஆடைகள் சந்தைத் தேவைக்கேற்பவடிவமைக்கப்பட்டு தயாரிக்கப் படுகின்றன. மார்க்கெட்டிங் மற்றும் மெர்க்கண்டைசிங் பிரிவில் சந்தையின் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட ஆடைகள் விற்பனைக்கு தயாராகின்றன. அன்றாட பாஷன் மாறுதல்கள் பற்றி தெளிவாக அறிந்திருப்பது இதற்கு அவசியம். உற்பத்திப் பிரிவானது தேவைப்படும் அளவு மற்றும் தரத்தை உறுதி செய்கின்றன. பாஷன் கோ-ஆர்டினேட்டர்கள் விற்பவர்களையும் வாங்குபவர்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளைச் செய்கிறார்கள். துணித் தன்மை பற்றியும் வடிவமைப்பு பற்றியுமான ஆலோசனைகளை இந்தப் பிரிவினர் தருகிறார்கள். துறையின் எதிர்காலம் எப்படி? இத்துறையின் வடிவமைப்புப் பிரிவு படிப்பை சிறப்புத் திறன்களுடன் முடிப்பவருக்கு பின்வரும் இடங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.ஆடை, துணி, கைத்தறி ஏற்றுமதி நிறுவனங்கள் விளையாட்டு மற்றும் கேசுவல் ஆடைகளை விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் அரசுத் துறையில் இயங்கும் கைத்தறி/டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பாஷன் மேளாக்களை நடத்தும் நிறுவனங்கள் ‘டிவி’ மற்றும் சினிமாத் துறையில் நிகழ்ச்சித் தயாரிப்பு, காஸ்ட்யூம் டிசைனர் ஆகிய ஒருங்கிணைப்புப் பணியில் வாய்ப்புகள் உள்ளன. சம்பளம் எப்படி? தனிப்பட்ட ஒருவரின் திறமையைப் பொறுத்தே ஊதியம் கிடைக்கிறது. புதிதாக பட்டப்படிப்பு முடிப்பவர் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் சம்பளம் பெறுகிறார்கள். பேப்ரிக் டிசைனிங் துறைக்குத் தேவைப்படும் திறனாளர்கள் அதிகமாக இருக்கிறது. ஆக்சஸரி டிசைன்: ஆடைகளுடன் தொடர்புடைய லெதர் பொருட்கள், காலணிகள், கிப்ட்வேர், டேபிள்சேர், விலையுயர்ந்த அலங்கார நகைகள் போன்றவற்றை ஆக்சஸரி டிசைன் எனக் கூறுகிறார்கள். இது பேஷன் துறையின் முக்கிய அங்கமாகும். மாடலிங் மற்றும் அழகுக் கலை: உலக அழகிகளை அதிக எண்ணிக்கையில் இந்தியா தரத் துவங்கியபின் இது அதிக புகழ் பெற்ற துறையாக விளங்குகிறது. டிசைனர், நடனப் பயிற்சியாளர், ஹேர்ஸ்டைலிஸ்ட், பல் மருத்துவர், டயட்டீசியன் ஆகியோர் இணைந்து இத் துறையில் செயல்படுகின்றனர். திறன் வளர்க்க இப் பிரிவில் ஏராளமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. பேஷன் போட்டோகிராபர்: பாஷன் டிசைனிங்கின் புதிய அங்கமாக மாறியுள்ள இப் பிரிவில் திறன் பெற்று வளர்ந்துள்ள ஒருவர் சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்க முடிகிறது. சேரும் முறை: நிப்ட் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் இத் துறை படிப்பைப் படிக்க அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குழு விவாதம், குழுத் திறன் போன்ற முறைகளும் கூடுதலாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. மிகக் கடுமையான போட்டியை உள்ளடக்கியதாக நிப்ட் படிப்புகள் இருக்கின்றன. தற்போது இந்தத் துறைப் படிப்புகளைத் தரும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.