லண்டன் மாணவர்கள் திட்ட கமிஷனில் பயிற்சி
லண்டனில் உள்ள கெல்லாக் பொருளாதார ஆய்வு கல்லூரியின் மாணவர்கள், படிப்புக்கு இடையேயான பயிற்சிக்கு, வெளியில் செல்வதுண்டு. முதன் முறையாக, திட்ட கமிஷனின் நிபுணர்கள் மூலம் பயிற்சி பெற உள்ளனர். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசு துறை நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில், அந்த துறை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு திட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன் முறையாக மத்திய அரசின் திட்ட கமிஷன், பொருளாதார ஆய்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை இரண்டாண்டுக்கு முன் ஆரம்பித்தது. ஆனால், மிககுறைந்த மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறது. ஆண்டுதோறும், பல கல்வி நிறுவனங்களில் இருந்து 300 மாணவர்கள் பதிவு செய்தாலும், 40 பேர் தான் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றனர். இங்கு பயிற்சி பெற்றால், சர்வதேச அளவில் அதிக செல்வாக்கு இருக்கிறது. இதனால், முதன் முறையாக லண்டன் கெல்லாக் பொருளாதார கல்லூரி மாணவர்கள், திட்ட கமிஷனில் பயிற்சி பெற முடிவு செய்துள்ளனர். இரண்டாண்டுக்கு முன், திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தான் இந்த பயிற்சி திட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார். அரசு நிதி பணிகள் எப்படி நடக்கிறது என்பதை அறிய மாணவர்களுக்கு வாய்ப்பு தந்தால், அவர்களின் அறிவுக்கூர்மை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகம், வெள்ளை மாளிகை, சர்வதேச நிதியம் போன்றவை பின்பற்றுகின்றன. இந்தியாவில், ரிசர்வ் பாங்க், சட்ட கமிஷன் போன்றவை பின்பற்றுகின்றன.