உள்ளூர் செய்திகள்

போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த ஊழியர்கள்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த புகாரில், கையும் களவுமாக பிடிபட்ட மூன்று பேர் மீது, ஒரு மாதமாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பல்கலை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணைவேந்தரின் அலட்சியப்போக்கால், பல்கலை தேர்வு துறையில் தவறுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலை தேர்வாணையத்தின் மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அங்கு பணிபுரியும் அலுவலர்களில் பெரும்பாலானோர் பணத்தை பெற்றுக்கொண்டு, தேர்வு முடிவு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு ஆகியவற்றில், கூடுதலாக மதிப்பெண்களை சேர்த்து, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக இந்த தவறுகள் நீடிப்பதற்கு காரணம், இதுவரை தவறு செய்த எந்த ஊழியருக்கும் உரிய தண்டனை கிடைத்ததில்லை. இதனால் பெரும்பாலான ஊழியர்கள் அலட்சியப்போக்குடன் பணிபுரிந்து வருகின்றனர். கையும் களவுமாக பிடிபடும் ஊழியர்கள் கூட, பெயரளவில் ஒரு சில வாரங்களுக்கு வேலைக்கு வராமல் இருந்து, மீண்டும் அதே சீட்டில் தன் பணியை தொடருகின்றனர். இந்நிலையில், செப்., 20ம் தேதி, தேர்வாணையரின் அனுமதியின்றி, போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்த ரவி, கனகராஜ், செல்வம் ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை குறித்து, சிண்டிகேட் உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை துணைவேந்தர் முத்துச்செழியன் அமைத்தார். இதில் கனகராஜ், செல்வம் இருவரும் தொகுப்பூதிய ஊழியர்கள். இருப்பினும் கையும் களவுமாக பிடிபட்டு ஒரு மாதமாகியும், இதுவரை சஸ்பெண்ட், டிஸ்மிஸ் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அலுவலர்களிடையே அலட்சியப்போக்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்த போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் பெண் ஊழியர் ஒருவரை தப்பிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் முத்துச்செழியனிடம் கேட்டபோது, "விசாரணைக்குழு அறிக்கையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படாமல், மேல் நடவடிக்கைக்கு சிண்டிகேட் கூட்டத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சிண்டிகேட் கூட்டத்தின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தவறு செய்யும் தொகுப்பூதிய பணியாளர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்க தயங்கும் துணைவேந்தரின் அலட்சியப்போக்கு, பல்கலை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்