பாடத்திட்டத்தை திருத்தியமைக்க நாலெட்ஜ் கமிஷன் வலியுறுத்தல்
பல பல்கலைக்கழகங்களில் காலாவதியான பாடத்திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எனவே, மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை ஆண்டுதோறும் திருத்தியமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் தோரத்துக்கு தேசிய அறிவு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதழியல் பாடத்திட்டத்தில் டைப்பிங் கற்பிக்கப்படுகிறது. ஆனால் பத்திரிகை அலுவகங்களில் தற்போது அது பயன்பாட்டில் இல்லை. கம்ப்யூட்டர் மவுஸை கிளிக் செய்தே முழு பத்திரிகையையும் படித்துவிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு பழைய முறைகளையே கற்றுத்தருவது சரியல்ல. காலத்திற்கு பொருந்தாத பாடத்திட்டங்களை படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு சிரமப்படுகிறார்கள் என்பதையும் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதேபோல காலாவதியான பாடத்திட்டங்களைப் படிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேருவதும் கடினமாக உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பிரதமரைத் தலைவராகக் கொண்ட தேசிய அறிவு ஆணையம், துணைவேந்தர்கள் நியமனத்திலும் அரசின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.