நீலகிரியில் நிலச்சரிவு: புவியியல் மாணவர்கள் ஆய்வு
குன்னூர்: "நீலகிரியில் வனங்கள் அழிக்கப்படுவதும், மண் வளம் சேதமடைவதும் நிலச்சரிவு, மண் சரிவுக்கு காரணமாகிறது" என, புவியியல் துறை மாணவர்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோல்கட்டா பைராப் புவியியல் கல்லூரி மாணவர்கள், தங்களின் ஆய்வுக் கட்டுரைக்கு நிலச்சரிவு தொடர்பான தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். நிலச்சரிவு அபாயமுள்ள நீலகிரி மாவட்டத்தில், பேராசிரியர்கள் டாக்டர். பாசு, டாக்டர். ராய்சவுத்ரி தலைமையில், 38 மாணவ, மாணவியர், ஐந்து நாள் ஆய்வுப் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சாட்டிலைட் வரைபடத்தை ஆதாரமாக கொண்டு, நிலச்சரிவு அபாயமுள்ள குன்னூர் காட்டேரி உட்பட இடங்களை, ஆங்குலர் மெஷர்ஸ் என்ற நவீன உபகரணத்தின் உதவியுடன் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் கூறியதாவது: நீலகிரியில் தற்போது 52 சதவீத வனங்கள் மட்டுமே உள்ளன. விவசாய நிலம், வனங்களில் பொக்லைன் பயன்படுத்தி நில அமைப்பை தங்கள் வசதிக்கேற்ப மாற்றினால், நிலச்சரிவு, மண்சரிவு உட்பட பாதிப்புகள் அதிகரிக்கும். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அங்கு குடியிருப்புகள் அமைக்கப்படுவதால், மண்ணின் உறுதித் தன்மை கெட்டு விடுகிறது. பாறைகளை வெடி வைத்தும், மனித ஆற்றல் மூலமும் உடைப்பது ஆபத்தானது என்று அவர்கள் கூறினர். இது குறித்து, வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசிய புவியியல் துறையினரின் கவனத்துக்கு அனுப்பவும் மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.