சமச்சீர் கல்வி மாதிரி வினாத்தாளில் குழப்பம்
இந்தாண்டு புதிய அரசு பொறுப்பேற்றதும், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதை எதிர்த்து சிலர் கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால் கோர்ட், ஏற்கனவே அரசு அறிவித்திருந்தபடி, முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும், என உத்தரவிட்டது. அதை ஏற்று தமிழக அரசு, முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களில், சில வேண்டாத பகுதிகளை நீக்கிவிட்டு, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வினியோகிக்கும்படி, அரசு உத்தரவிட்டது. அதன்படி பாடப்புத்தகங்களில் நீக்கப்பட வேண்டிய பாடங்கள் மீது, பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது. அந்தப் பாடங்களை நடத்த வேண்டாம், என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பள்ளிகளில், நீக்கப்பட்ட பாடங்கள் நடத்தப்படவில்லை. ஆனால், நோட்ஸ்களில் அரசு நீக்கக் கூறிய பாடப்பகுதிகள் நீக்கப்படவில்லை. விரைவில் நடைபெற உள்ள இரண்டாம் பருவத்தேர்வையொட்டி, பள்ளிகளுக்கு தமிழ்நாடு Text Book கார்ப்பரேஷன் சார்பில் வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில், நீக்கப்பட்ட பாடப்பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வரும் என்பதால், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள், நீக்கப்பட்ட பாடங்களையும் நடத்த துவங்கி உள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறும்போது, &'மாதிரி வினாத்தாளில், நீக்கப்பட்ட பாடப்பகுதியிலிருந்து கேள்விகள் உள்ளதால், தேர்வுக்கான வினாத்தாளிலும் அந்தக் கேள்விகள் வந்தால், மாணவர்கள் பதில் அளிக்க முடியாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக, நீக்கப்பட்ட பாடங்களையும் நடத்துகிறோம்&' என்றனர். உதாரணத்திற்கு ஒன்று: ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான, மாதிரி வினாத்தாளில், நசுக்கப்பட்ட மக்கள், கலைஞர் உயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், தனியார் மருத்துவமனையில் அதிக செலவில், சிறப்பான சிகிச்சைப் பெற்றனர் என்பது சரியா, தவறா? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.