சென்னை பல்கலைக்கழகத்தில் அதிகளவில் மாணவர் சேர்க்கை
சென்னை: &'இந்தாண்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் 112 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது&' என, பல்கலைக் கழக துணை வேந்தர் திருவாசகம் கூறினார். பல்கலைக் கழக மேலாண்மைத் துறை சார்பில், &'மனிதவள பயன்பாட்டில் தலைமுறை இடைவெளி&' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், துணை வேந்தர் திருவாசகம் பேசியதாவது: உயர் கல்வியில் அதிக அளவில் மாணவர்களைச் சேர்ப்பது, நலிந்த பிரிவினருக்கு உரிய வாய்ப்பளிப்பது, கல்வியில் சிறப்பிடம் பெறுவது என்பதுதான் பல்கலைக்கழகங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென தேசிய அறிவுசார் ஆணையம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக் கழக மானியக் குழு ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில், இந்தாண்டு ஒவ்வொரு துறையிலும் மாணவர் சேர்க்கை 112 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகள், நலிவடைந்தோர் உள்ளிட்டவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டுக்கு அதிகமாக அவர்களுக்கு இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பிஎச்.டி., படிப்பில், முதன்முதலாக இட ஒதுக்கீடு வழங்கியது சென்னை பல்கலைக்கழகம் தான். கல்வியில் சிறப்பிடம் பெற, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்கலை மாணவர்கள் இதுபோன்ற கருத்தரங்குகளை ஓட்டலில் நடத்துவதற்கு பதிலாக தொழில் நிறுவனங்களில் நடத்தினால், அங்குள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடி புதிய அனுபவத்தைப் பெற முடியும். இவ்வாறு திருவாசகம் பேசினார். இந்தியன் வங்கித் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பாசின், கருத்தரங்கை துவக்கி வைத்து பேசும்போது, &' இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி.,) சீனாவை விட குறைவாக இருக்கலாம். ஆனால், பதிவு செய்யப்படாத உள்நாட்டு மொத்த உற்பத்தி, சீனாவை விட அதிகம்&' என்றார். பல்கலை மேலாண்மைத் துறை தலைவர் தேன்மொழி, வரவேற்றுப் பேசினார்.