விழுப்புரத்தில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
விழுப்புரம் : தினமலர் நாளிதழ் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன், சிறப்பான முறையில் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா நடத்தப்படுகிறது. இவ்விழா ஞாயிற்றுக் கிழமையன்று விழுப்புரம் இ.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி பாடம் குறித்தும், தேர்வு எழுதும் முறைகள் மற்றும் வினாத்தாள்கள் மாதிரி குறித்தும் கருத்துரைகள் வழங்கினர். அதேபோல் மதியம் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, கேள்வி தாள் வகைகள் மற்றும் எளிய முறையில் பதில் எழுதுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் தன்னம்பிக்கை புத்தகம், முக்கிய வினா விடைகள், மாணவர்களின் உடல் நலம், மன நலம் பாதுகாத்தல் குறித்த புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பேனா, பென்சில், ஸ்கேல் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவர்கள் வந்து செல்ல வசதியாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் சிக்னல் அருகே இருந்து இ.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின் வெளியேறிய மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் சென்றனர்.