உள்ளூர் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு வெளியீடு

திருநெல்வேலி : இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பணிக் காலியிடங்களுக்காக ஏற்கனவே 2010ம் ஆண்டு இந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்ட இடைநிலை ஆசிரியர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள பதிவு மூப்பு தேதிக்குள் பதிவு செய்துள்ளவர்களின் பெயர்கள் மட்டும் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு வாரியாக பதிவு மூப்பு விபரம், முன்னுரிமை உடையவர், முன்னுரிமை அற்றவர் என்ற விபரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் பெயர் இடம் பெற்றவர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட பதிவு மூப்பு தேதிக்குள் பதிவு செய்திருந்தும் இணையதளத்தில் தங்கள் பெயர் இடம் பெறவில்லை என தெரிந்தால் அவர்கள் மட்டும் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் கல்வி சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் நேரில் ஆஜராகி விண்ணப்பம் செய்து அலுவலகத்தில் வழங்கப்படும் சான்றினை பெற்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெறலாம். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 23ம் தேதியாகும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் சண்முக சுந்தர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்