உள்ளூர் செய்திகள்

‘ஆராய்ச்சியில் ஈடுபடாத ஆசிரியர்கள்’; கல்வியாளரின் வருத்தம்

சென்னை: “நம் நாட்டு பல்கலை மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை. தரமான கட்டுரைகளையோ, ஆராய்ச்சி நூல்களையோ எழுதுவது இல்லை,” என்று முன்னாள் துணைவேந்தர் அறவாணன் வருத்தம் தெரிவித்தார். பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் குருசாமி எழுதிய ‘இளம்பூரணர் உரைநெறி, சேனாவரையர் உரைநெறி, பேராசிரியர் உரைநெறி, நச்சினார்க்கினியர் உரைநெறி’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், நூல்களை வெளியிட்டு பேசினார். ‘பேராசிரியர் உரைநெறி’ என்ற நூலை ஆய்வு செய்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் பேசியதாவது: மூல நூலான தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கு முற்பட்டது என்பதற்குப் புதிய சான்று கிடைத்துள்ளது. தொல்காப்பியத்தில் பிரம்மச்சர்யம், சன்யாசம் பற்றிய குறிப்பு இல்லை; துறவு பற்றிய செய்தியே இல்லை. தொல்காப்பியம் ஜைன, பவுத்த மத வரவுகளுக்கு முன் எழுதப்பட்டமையால் தான் அந்நூலில் துறவு பற்றிய கருத்துகள் இடம்பெறவில்லை. கி.மு., ஐந்தாம் நூற்றாண்டில் ஜைன, பவுத்த மதங்கள் தமிழகத்தில் வந்த பின் தான் துறவு பற்றிய கருத்துகள் பரவின. அதற்கு முன், தமிழர்கள், குடும்ப நெறியையே போற்றி வந்துள்ளனர். இதன் மூலம் தொல்காப்பியம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது உறுதியாகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்களைப் பற்றி, நூல் ஆசிரியர் குருசாமி ஆராய்ந்து விளக்கியுள்ளார். சங்க இலக்கியங்களில் அரசரை அவன் என்றும் புலவர்களை அவர் என்றும் மரியாதை கொடுத்து குறிப்பது வழக்கம். முடியரசராக இருந்த போதிலும் அறிவுக்கு மதிப்பு கொடுக்கும் பழக்கம் இருந்தமையால், ‘அவனை அவர் பாடியது’ என உரையில் அரசனையும், புலவரையும் குறித்தனர். இந்த முறை கி.பி., 10ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை தொடர்ந்துள்ளது. முதல் ராஜராஜன், குலோத்துங்க சோழன், ராஜேந்திர சோழன் என்று அரசர்களைக் குறித்தவர்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களை சேனா வரையர், நச்சினார்க்கினியர் என்றும் மரியாதையுடன் பன்மையில் குறித்துள்ளனர். பிற்கால சோழர் காலத்திலும் அறிஞர்களுக்கே முதல் மதிப்பு இருந்துள்ளது தெரியவருகிறது. இன்னொரு படி மேலே போய், அரசர்களைப் பெயர் சொல்லி அழைத்தவர்கள், அறிஞர்களைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்ற பண்பு மேற்கொள்ளப்பட்டது. தொல்காப்பியத்திற்கு முதல் உரை எழுதிய புலவரை, பெயர் சொல்லாமல் உரையாசிரியர் என்றும், இன்னொரு அறிஞரை பேராசிரியர் என்றும் அழைத்தனர். மிகச்சிறந்த அறிஞர் பெருமக்களை மரியாதை கொடுத்து, பெயர் குறிக்காது விடுதல் அந்த கால மரபாக இருந்துள்ளது. இந்த நிலை, இன்று எப்படி மாறிப்போயுள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பேராசிரியர் என்னும் உரையாசிரியர் தொல்காப்பிய நூல் அமைப்பில் மரபியல் என்பதற்கு முதன்மை கொடுத்து நிறைவு இயலாக (27வது இயலாக) அமைத்துள்ளார். தமிழர்கள் தங்களது வேர்களை மறக்காமல் பழைய மரபுகளைப் போற்ற வேண்டும் எனும் கருத்தில் அவர் அப்படி அமைத்துள்ளார். மூத்தோர் சொல்லை ஏற்றுக் கொள்ளுதல் என்ற பண்பாட்டை பேராசிரியர் தம் தொல்காப்பிய உரையில் பின்பற்றியுள்ளார். இது போன்ற பல செய்திகளை குருசாமி நுணுக்கமாகக் கண்டறிந்து தம் நூலில் விளக்கியுள்ளார். நம் நாட்டு பல்கலை மற்றும் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை. தரமான கட்டுரைகளையோ, ஆராய்ச்சி நூல்களையோ எழுதுவது இல்லை. இந்த நிலைக்கு விதிவிலக்காக நூலாசிரியர் குருசாமி ஒரே சமயத்தில் நான்கு நூல்களை வெளியிட்டு தம் கடமையை நிறைவு செய்துள்ளார். இவ்வாறு கப.அறவாணன் பேசினார். தொடர்ந்து, ‘சேனாவரையர் உரைநெறி’  என்ற நூலை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தியும், ‘நச்சினார்க்கினியர் உரைநெறி’ என்ற நூலை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானசுந்தரமும், ‘இளம்பூரணர் உரைநெறி’ என்ற நூலை சாகித்ய அகடமி உறுப்பினர் குருநாதனும் ஆய்வு செய்து பேசினர். நூல் ஆசிரியர் குருசாமி ஏற்புரையாற்றினார். பச்சையப்பன் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன், திருமுருகன் கல்லூரி முன்னாள் முதல்வர் குமரவேலன், பிரகாசம், ஆண்டவர், அரசு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்