பிளானிங் அண்டு ஆர்க்கிடெக்சருக்கு இரண்டு கல்லூரிகள்
இந்தியாவில் நகரங்களின் பரப்பளவு நாள்தோறும் அதிகரிக்கிறது. புதிய நகர்புறங்கள் உருவெடுக்கின்றன. இதன் காரணமாக கட்டுமான துறையில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. மத்திய அரசும் பிளானிங் அண்டு ஆர்கிடெக்சர் தொடர்பான படிப்புகளை வழங்க இரண்டு கல்லூரிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலிலும், மற்றொன்று ஆந்திராவின் விஜயவாடாவிலும் அமையும். இதற்காக ஏறத்தாழ 350 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த கல்லூரிகள் வரும் 2013 ஆண்டுக்குள்ளாக செயல்பட தொடங்கும். ஆர்க்கிடெக்சர், நகர் திட்டமிடல் போன்ற துறைகளுக்காக பிரத்யேகமாக இவை செயல்படும். இளநிலை, முதுநிலைப்படிப்புகளும் டாக்டரேட் ஆய்வுப்படிப்பும் வழங்கும் வகையில் இவை அமையும். இங்கு படிப்பை முடிக்கும் மாணவர்கள் இது தொடர்பான கன்சல்டன்சி பணிகளிலோ, ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பணிகளிலோ ஈடுபடலாம். இந்த நிறுவனம் அவ்வப்போது நகர்திட்டமிடல், கட்டட வடிவமைப்புகள் தொடர்பான ஆலோசனையை அரசுக்கு வழங்கும். ஏற்கனவே இந்த துறைக்காக ‘ஸ்கூல் ஆப் பிளானிங் அண்டு ஆர்க்கிடெக்சர்’ என்ற கல்லூரியும் டில்லியில் செயல்பட்டு வருகிறது.