திருக்குறளுக்கு ஓவியம் வரைந்த பள்ளி ஆசிரியர்
கோவை, பல்லடம் அருகே, சுல்தான்பேட்டை ஒன்றியம் சின்ன வதம்பச்சேரி எஸ்.சி.எம்., மேல்நிலைப் பள்ளியில், 17 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஈஸ்வரன்(45); கும்பகோணத்தைச் சேர்ந்தவர். முறையாக ஓவியம் பயின்று, பட்டயம் பெற்றவர். திருக்குறளின் முழுப் பொருளையும் ஓவியமாக வரைந்து, அதன் கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஈஸ்வரன் முடிவு செய்தார். பள்ளி நேரம் போக, மீதமுள்ள நேரங்களில், ஆயிரத்து 330 திருக்குறளுக்கும் தகுந்தவாறு, கருப்பு, வெள்ளையில் ஓவியமாக வடித்தார். ஓவ்வொரு குறளுக்கும் ஏற்ப கருத்தை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு அட்டையின் மேற்புறம் ஓவியம் வரைந்து வைத்துள்ளார். இதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. கடந்த 1994ம் ஆண்டு திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் தனித்தனியாக 133 ஓவியங்கள் வரைந்து, அதன் அருகிலேயே அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களின் பொருளை உள்ளடக்கிய கவிதையையும் எழுதினார் ஈஸ்வரன். இவரது சாதனைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு பெற்றுள்ளார். “பைபிள் கருத்துக்களை ஆழமாக படித்து, ஓவியமாக வரைவது, என் அடுத்த லட்சியம்,” என, ஈஸ்வரன் தெரிவிக்கிறார்.