‘வளர்ந்துள்ள கல்வித்துறையை குறைகூறும் மேதாவிகள்’: பொன்முடி
காரைக்குடி: தமிழகத்தில் ‘படித்த மேதாவிகள்’ வளர்ந்துள்ள கல்வித்துறையை குறைகூறுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் ரூ.8.25 கோடி மதிப்பிலான கட்டட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:தமிழகம் படிப்படியாக வளர்ந்து பொலிவுடன் உள்ளது. கல்வித்துறை வளர்ந்துள்ளது. இருப்பினும் ‘படித்த மேதாவிகள்’ இத்துறையை குறைகூறுவதை நோக்கமாக கொண்டுள்ளனர். ஆசிரியர் கல்விக்கென தனியாக பல்கலை.,யை தமிழக அரசு துவக்கியுள்ளது. ஆசிரியர்கள் கூடுதலாக படித்து புதிய கல்வி முறையை கற்கவேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு புதியவைகளை கற்றுத்தரமுடியும். தமிழகத்தில் ஒரே ஆண்டில் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளை துவக்கியுள்ளோம். உயர்கல்வியின் நோக்கம்: எண்ணிக்கையை அதிகரித்து தரத்தை உயர்த்துவது தான் உயர்கல்வியின் நோக்கம். பொறியியல், மருத்துவத்தில் நுழைவு தேர்வை ரத்து செய்ததால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பயனடைந்தனர். பொறியியல் கல்லூரியில் 2006-07ம் ஆண்டில் பேரூராட்சி, ஊராட்சி பகுதியை சேர்ந்த 24,670 பேர் தான் சேர்ந்தனர். இந்த ஆண்டில் 50 ஆயிரத்து 57 பேர் சேர்ந்துள்ளனர். அரசு பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 7 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. கலை, அறிவியல் கல்லூரிகளில் 2006ம் ஆண்டில் 5.68 லட்சம் மாணவர்கள் படித்தனர். 2007-08ம் ஆண்டில் இது 6.74 லட்சமாக உயர்ந்துள்ளது. சிறுபான்மையினருக்கு சலுகை: பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததால், பொறியியல் படிப்பில் இந்தாண்டு 31,921 பேர் சேர்ந்துள்ளனர். தமிழ் மீடியத்தில் 35 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.இது போன்ற வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அரசு நுழைவு தேர்வுமுறையை ரத்து செய்தது தான். சிறுபான்மையினருக்கு பொறியியல் கல்லூரியில் இடஒதுக்கீடு தந்ததால் இந்த ஆண்டு 2,565 முஸ்லிம், 2,757 கிறிஸ்தவ மாணவர்கள் சேர்ந்துள்ளனர். புதிதாக 26 கல்லூரிகள்: தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 26 மாவட்டத்தில் மத்திய அரசு ரூ.8 கோடியில் 26 கல்லூரிகளை துவக்க உள்ளது. 5 ஆண்டிற்கு கல்லூரிகளை செயல்படுத்த தலா ரூ.1.50 கோடியை மத்திய அரசு தரும். இவ்வாறு அவர் பேசினார். துணைவேந்தர் ராமசாமி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். பதிவாளர் இளமதியன் நன்றி கூறினார்.