உள்ளூர் செய்திகள்

‘பருவநிலை மாற்றம் அபாயகரமானது’: கருத்தரங்கில் விளக்கம்

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ‘வேளாண்மையில் பருவநிலை மாறுபாட்டின் விளைவுகள்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. இதில், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அகர்வால் பேசியதாவது: பருவநிலை மாற்றத்தால், இந்த நூற்றாண்டின் இறுதியில் 48 சதவீதம் உணவு தானிய உற்பத்தி குறையும். இன்றைய சூழலில் உணவு தானியத் தேவை அதிகரித்துள்ளது. இதை எதிர்கொள்ள துரித நடவடிக்கை  அவசியம். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய கடல் நீரில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், கடல் பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதுபோல், வெப்பநிலை உயர்ந்தால், அடுத்த 20 ஆண்டுகளில் 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை இழக்க நேரிடும். பருவநிலை மாற்றம், தினமும் நடந்து கொண்டிருக்கிறது. உலக பருவநிலை மாற்றத்துக்கு காரணமான  13.5 சதவீத வாயுக்கள், விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களில் இருந்து வெளியேறுகின்றன. உலகிலேயே இந்தியாவில் தான் 28 சதவீதம் அளவுக்கு வேளாண் பயிர்களில் இருந்து வாயுக்கள் வெளியேறுகின்றன. இதுபோன்ற வாயுக்கள் 60 சதவீதம் கால்நடைகளில் இருந்தும், 25 சதவீதம் நெல் போன்ற தாவரங்களில் இருந்தும் வெளியேறுகின்றன. இந்த வாயுக்களைக் கட்டுப்படுத்தும்படி, இந்தியா மற்றும் சீனாவை, வளர்ந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த வாயுக்களை பல்வேறு தொழில்நுட்ப உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தால், 50 லட்சம் டன் கோதுமை உற்பத்தியை இழக்க நேரிடும். இதன் மதிப்பு ரூ.5,000 கோடி. வெப்பநிலை உயர்வதால், இதைவிட அதிக பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அகர்வால் பேசினார். தொடர்ந்து கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி பேசியதாவது:கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை, உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம். பெட்ரோல், டீசல் ஆகியவை வாகனங்களில் எரிக்கப்படும் போது வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு அளவு 25 சதவீதம். இந்த வாயுவை விட மீத்தேன் 20 மடங்கு வெப்பத்தை அளிக்கும். நெற்பயிரில் இருந்தும், அங்ககப் பொருட்கள் மண்ணில் மட்கும் போதும் மீத்தேன்  வெளிப்படுகிறது. வரும் 2100ம் ஆண்டில்  1.1 டிகிரி முதல் 6.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். அப்போது கடல்நீர் மட்டம் 7 இன்ச் முதல் 23 இன்ச் அளவுக்கு உயரும். அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாவதால், உணவு தானிய உற்பத்தி வெகுவாக குறையும். பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில் 2030ம் ஆண்டு 10 சதவீதம் அளவுக்கு அரிசி உற்பத்தி குறையும். இதற்கான மாற்று வழிகளை முறைப்படி கடைபிடித்தால், கார்பன் -டை-ஆக்சைடு வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியும்; சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் ஆற்றலை அனைத்து நாடுகளும் பயன்படுத்த வேண்டும். வனங்கள் அழிக்கப்படுவதை தடுக்க உலக அளவில் தடை வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் ராமசாமி பேசினார். இப்பயிலரங்கில் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குனர் பழனிசாமி, கணித பேராசிரியர் ரங்கநாதன் ஆகியோரும் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்