மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்
கோத்தகிரி: "மக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்" என கருத்தரங்கில் தெரிவிக்கப்ட்டது. கோத்தகிரியில் அறிவியல் தினவிழா கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க, மாவட்ட செயலாளர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக கலந்துகொண்டு பேசுகையில், "பெரும்பாலான மக்கள், அறிவியல் என்பது பள்ளி மாணவர்களுக்கான பாடம் என, நினைக்கின்றனர். அறிவியல் என்பது, நம்மையும், நம்மை சுற்றியுள்ள உலகத்தையும் புரிந்துகொள்ளுதல் ஆகும். இந்த மாதம், 12ம் தேதி "பேன்ஸ்டார்" எனப்படும் ஒரு வால் நட்சத்திரம் நிலவுக்கு மிக அருகில் தெரியும் அற்புத காட்சியை, டெலஸ்கோப் இல்லாமல் வெறும் கண்ணால் காண தவறாதீர்கள். அறிவியல் தொழில்நுட்பம், வளர்ந்துவரும் நிலையில், நம்நாடு உலகிலேயே மிக குறைந்த அறிவியல் எழுத்தறிவுடைய நாடாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசும், ஆசிரியர்களும் அறிவியல் குறித்து, மக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்றார். தொடர்ந்து, அறிவியல் முக்கியத்துவம் குறித்த குறும்படம் காண்பிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் அமுதா வரவேற்றார். ஆசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.