வேளாண் பல்கலை மாணவிகளுக்கு கிருஷ்ணகிரியில் பயிற்சி
கிருஷ்ணகிரி: கோவை வேளாண் பல்கலையில், இறுதியாண்டு பி.டெக்., படிக்கும், 24 மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் துறை சார்பில், 10 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூரில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு வேளாண் பயிர்களான நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்து பயிர்கள், கரும்பு, தோட்டக்கலை பயிர்களான தக்காளி, கத்திரி, வெண்டை, மா, ரோஜா, ஜெர்பாரா, கார்னேசன் போன்ற மலர் பயிர்கள், சாகுபடி பற்றியும் காய்கறி பயிர்களான முட்டைகோசு, காலிபிளவர், கேரட் போன்ற பயிர்கள் பற்றியும், துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு நலத்திட்டங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் வேளாண் தோட்டக்கலை மற்றும் வனமரங்கள் மூலமாக உருவாகும் கழிவுப்பொருட்களை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறையினை போச்சம்பள்ளி அருகில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அழைத்து சென்று மின்சாரம் தயாரிக்கும் முறை மற்றும் கழிவுகளை முறையாக பயன்படுத்துவது குறித்தும் பாடம் நேரில் கற்பிக்கப்பட்டது. மா பழக்கூழ் தொழிற்சாலைகள், பால்கோவா தொழிற் சாலைகளுக்கு சென்று அங்கு பயன்படுத்தும் கழிவு நீரை, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் சுத்திகரிக்கும் நிலையத்தை ஆய்வு செய்து அதன் பயன்பாடுகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. தனியார் குவாரி மற்றும் நவீன நெல் அறைவை ஆலைகளில் ஏற்படும் மாசு காட்டுப்பாடுகள் குறித்தும் அதனை தவிர்க்க அரசு எடுக்கும் முயற்சிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இந்த மாணவிகள் ஊரக வளர்ச்சி மூலம் செயல்படுத்தப்படும் சாண எரிவாயு சம்பந்தமாக ஏறக்குறைய, 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை கிராம அளவில் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பயிற்சி எதிர்காலத்தில் அவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்ற பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.