திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியானது
வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், 106 கல்லூரிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியில் இருந்து மே, 28 வரை தேர்வு நடந்தது. இதில், முதுகலை பட்ட படிப்பு மாணவர்கள், 7,492 பேரும், இளங்கலை பட்டப் படிப்பு மாணவர்கள், 97,207 பேரும் தேர்வு எழுதினர். வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட நான்கு மையங்களில் இளங்கலை பட்டப் படிப்பு மாணவர்கள் 8 லட்சத்து 71 ஆயிரத்து 310 விடைத்தாள்களும் முது கலை பட்டப் படிப்பு மாணவர்களின், 50 ஆயிரத்து, 899 விடைத்தாள்களும் திருத்தப்பட்டது. "தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டது," என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சையத் ஷபி கூறினார். ஆனால், தொழில் நுட்ப காரணங்களால் இணைய தளங்களில் நேற்று (ஜூலை 26) மதியம் வரை தேர்வு முடிவுகளை பார்க்க முடியவில்லை. இது குறித்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் கோளாறுகள் சரி செய்யப்பட்ட பின் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்ததாக தெரிவித்தனர்.