சென்னை பல்கலையின் இலவச கல்வி திட்டம்
ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில், சென்னை பல்கலைக்கழகத்தில், "இலவச கல்வி திட்டம்" 2011ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளில், இளங்கலை படிப்பில், மாணவர் இலவசமாக கல்வி கற்க முடியும். இந்தாண்டு, இத்திட்டத்தில் கல்வி பயில, 430 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், தகுதியில்லாத, 65 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள, 365 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். முதல் தலைமுறை பட்டதாரி, 2 லட்சம் ரூபாய் குறைவாக வருமானம் உள்ளோர், வீடு, நிலம் இல்லாதோர் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில், 97 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாணவர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள, 46 கல்லூரிகளில், பி.காம்., - பி.எஸ்சி., - பி.சி.ஏ., உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் கல்வி கற்க உள்ளனர். மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் பேசுகையில், "தமிழகத்தில், சென்னை பல்கலையில் மட்டுமே, இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மாணவர் இத்திட்டத்தை பயன்படுத்தி கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும்" என்றார்.