ஒழுக்கம் தவறும் மாணவர்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள்
சென்னை: மாணவர்கள் போதையில் பேருந்தில் அட்டகாசம் செய்ததால், பாதி வழியிலேயே பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் உள்ள, பிரபல கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள், அத்துமீறல்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நிலையில், நேற்று பிற்பகல், பழமையான கல்லூரியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கோயம்பேடு அண்ணா சதுக்கம் செல்லும் (தடம் எண் 27பி) பேருந்தில், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் ஏறினர். அதில், மது அருந்தி விட்டு, போதையில் இருந்த சில மாணவர்கள், பேருந்தின் கூரை மீதும், சிலர், படிக்கட்டுக்களில் நின்றும், பக்கவாட்டு கம்பியை பிடித்த படியும் பயணித்தனர். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கேட்டுக் கொண்டும், மாணவர்கள், அவர்கள் விருப்பம் போல் பயணித்தனர். பேருந்து, எழிலகம் அருகே வந்த போது, போதையில் மேற்கூரையில் ஆட்டம் போட்ட ஒரு மாணவர், தடுமாறி கீழே விழுந்தார். இதனால், பேருந்து நிறுத்தப்பட்டது. சக மாணவர்கள், கீழே விழுந்த மாணவனை தூக்கி, ஆசுவாசப்படுத்தி, மீண்டும் அதே பேருந்தில் ஏற்றினர். இதனால், 20 நிமிடம் தாமதமாக பேருந்து புறப்பட்டது. இந்த போதை மாணவரால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து, போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், "கல்லூரி துவங்கிய நாள் முதல் மாணவர்களால் நாங்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம். இவர்களால் பேருந்தில் வரும் பயணிகள் மட்டுமின்றி, எங்களுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை" என்றனர்.