உள்ளூர் செய்திகள்

பார்வையற்றோருக்கு புதிய திட்டம் உருவாக்க வேண்டும்

சென்னை: "பார்வையற்றோருக்கு, சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில், புதிய திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். கோரிக்கைகளை அறிய, பார்வையற்றோர் அமைப்புக்களை அழைத்து முதல்வர் பேச வேண்டும்; இல்லாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்" என தேசிய பார்வையற்றோர் இணையத்தின், தமிழக கிளை வலியுறுத்தியுள்ளது. தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தமிழக பிரிவின் திட்ட இயக்குனர் மனோகரன், தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது: பார்வையற்றோருக்கு, சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசு புதிய தி“ட்டத்தை உருவாக்க வேண்டும். அதன்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும், குறைந்த வருவாய் உள்ள பார்வையற்றோருக்கு, இலவச வீடு, மாதம், 30 கிலோ அரிசி, 2,500 ரூபாய் உதவித்தொகை தர வேண்டும். புத்தகம் கட்டுவோர், பிட்டர் பயிற்சி பெற்ற பார்வையற்றோருக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று, நான்காம் பிரிவுகளில், வேலை வழங்க வேண்டும். பார்வையற்றோருக்கான சிறப்பு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்போருக்கு, உடனடியாக வேலை தர வேணடும். பார்வையற்றோர் சுய தொழில் தொடங்க, விதிகளை தளர்த்தி, எளிதில் கடன் உதவி கிடைக்க வழி செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி வணிக வளாகங்களில், பார்வையற்றோருக்கு கடைகள் ஒதுக்க வேண்டும். வேலை கேட்டு ஒருமாதத்திற்கு மேலாக போராடி வரும் பார்வையற்ற பட்டாதாரி மாணவர்களை, மாநில அரசு வதைக்கும் செயல் கண்டிக்கதக்கது. அவர்கள், முதல்வரை சந்திக்க வழி செய்ய வேண்டும். அதுபோன்று, பார்வையற்றோருக்கு உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும், அனைத்து பார்வையற்றோர் அமைப்புக்களையும், முதல்வர் அழைத்து பேச வேண்டும். அப்படி பேச மறுத்தால், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தமிழக கிளையும், பல்வேறு போராட்டங்களில் குதிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்