உள்ளூர் செய்திகள்

சிறிய நகரங்களுக்கு செல்லும் சாப்ட்வேர் நிறுவனங்கள்

பெங்களூரு: சென்னை, மும்பை, டில்லி என்று பெருநகரங்களை விட்டு, சிறிய நகரங்களுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனம், டி.சி.எஸ்., ஒரிசாவில் புவனேஸ்வர், தமிழகத்தில் கோவை போன்ற நகரங்களில் தன் நிறுவனத்தை பெரிய அளவில் நிறுவ திட்டமிட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மனை மற்றும் கட்டடம் வாங்கும் செலவு குறையும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது. மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே ஆகிய ஐந்து நகரங்களில் தான் டி.சி.எஸ்., அதிக கவனம் செலுத்தி வருகிறது. அங்கு தான் பெரிய அளவில் நிறுவனத்தை அமைத்துள்ளது. இந்த நகரங்களில் சொந்தமாகவோ, வாடகைக்கோ இடங்களை வாங்கியுள்ளது. டி.சி.எஸ்., நிறுவனத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில், 16  ஆயிரம் பேர், வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இதில், கணிசமான பேர் அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சாப்ட்வேர் பணிகளுக்கான ஆர்டர்களை அமெரிக்க நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன. அதனால், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வருமானம் குறைந்து விட்டது. இதை சமாளிக்க முடியாமல், பல நடுத்தர சாப்ட்வேர் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் இருந்து ஆட்களை குறைத்து விட்டன. சில சாதாரண நிறுவனங்கள் மூடியும் விட்டன.  பெரிய நிறுவனங்கள் மட்டும் சமாளித்து வருகின்றன. அந்த வகையில், ரியல் எஸ்டேட்  நிலவரத்தை கணக்கிட்டு, சென்னை உட்பட பெருநகரங்களில் இடம் வாங்குவதையோ, வாடகைக்கு எடுப்பதையோ தவிர்த்து, குறைந்தபட்சம் 10 சதவீத செலவை குறைக்க  டி.சி.எஸ்., போன்ற நிறுவனங்கள் எண்ணுகின்றன. டி.சி.எஸ்., நிறுவனத்தின் கடந்த முதல் ஆறு மாத வருமானம் 13 ஆயிரத்து 300 கோடி ரூபாய். இதில் மொத்த செலவு என்று பார்த்தால் 5,000 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் சம்பளம் உட்பட செலவுகளில் கட்டுப்படுத்த போதுமான அளவில் நடவடிக்கை எடுத்தாலும், சிறிய நகரங்களில் நிறுவனத்தை அமைத்தால் பெரிய அளவில் செலவை குறைக்கலாம் என்று டி.சி.எஸ்., போன்ற நிறுவனங்கள் எண்ணுகின்றன. இதுபோல, ஊழியர்கள் சம்பளத்திலும் செலவை 20 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் சாப்ட்வேர் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதற்கேற்ப, தமிழகம், கர்நாடக அரசுகளும், சிறிய நகரங்களில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நிலம் தர தயாராக இருக்கின்றன; இதற்கு,  வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதும் ஒரு காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்